21 Dec 2010

காண் யான்என் இடப்பக்க வழி
தாழ் திறந்து
நினைவலைகளில் - உனக்கான
கனவுக் காட்சிகளை
உருவி
திரையிடுகிறேன்...

நகைக்கிறாய் - உன்
பிஞ்சு விரல்களால்
மெல்ல  வருடுகிறாய்
நேற்று பொழிந்த
பனிமழையில்
நனைகிறேன் நான்....

அள்ளி எடுத்து
காற்றில்
துள்ளிக் குதித்து
வீசி விளையாடுகிறாய்
காண் யான்
உயிர் சுவாசிக்கும்
நிஜங்களாய் - மிதந்து
தரை தொடுகிறேன்....

இதழ் நுனிகளில்

பதியும் - உன்
முத்தங்களின் ஈரம் -
என்னுள்
பெண்மையை தீண்டுதடி
முலையிலும் பாசம் சுரக்குதடி...


10 Dec 2010

முதல் பனி - 2
பனி என்றால்
அழகு, சந்தோசம், இனம் புரியா ஆனந்தம்.
உங்கள் முதல்
கவிதை
சம்பளம்
காதல்
பிள்ளையின் முதல் மொழி , அம்மா/அப்பா, முதல் கிறுக்கல்
முத்தம்....
இன்னும் பல சொல்லிக் கொண்டே போகலாம். இப்படி பல நிகழ்வுகளை நினைவில் நிறைத்து சுவாசிக்கலாம் இன்பத்தை.

பதின்ம  வயதில் கிறுக்கத் தொடங்கிய எனக்கு, எழுத்தைப் பற்றியும், மொழியை பற்றியும் பெரிய ஞானம் இருந்ததில்லை (இப்போ மட்டும் என்னவாம் ன்னு கேட்காதீங்க ப்ளீஸ்).

நாம் காதலிக்கும் பெண் நம்மை காதலிக்க, 
காதலின் வேகம் கூடுமே அப்படி,
எழுத்தின் வலிமையை உணர்ந்த தருணங்களில் எழுதும் வேகம் கூடியது. அதன் வழியே நட்புகளும் அமையப்பெற்றன உங்களைப்  போல.

நான் அனுபவித்த முதல் பனி எப்படி ஓர் அழகிய உணர்வோ, 
அதையே பிரதி எடுக்கும்
சில மனிதர்களின் சந்திப்பும், கை குலுக்கல்களும்.

இப்போ உங்களுக்கு புரிந்திருக்குமே, உங்கள் கணிப்பு சரிதான்...
இனி அப்படியான ஓர் அருமையான முதல் சந்திப்பு...

அன்று திருவிழா...
பட்டாசுகள் காதின் ஆழம் வரை சத்தத்தின் வலிமையைக் கொண்டு சென்ற களைப்பில் உறங்கப்போகும் அந்த இரவு வேளையில், 
நீண்டப் பயணத்திற்கு தயாராகிக் கொண்டிருந்தது மனசு...

ரோட்டோரக் கடையை திறக்க வைத்து, நாங்கள் சில பல ரொட்டிகளை உள்ளே தள்ளிய பின், உருமத் தொடங்கியது டாடாவின் குடும்பக் கார் ஒன்று.

ஏதோ பார்க்காததை பார்ப்பது போல் நெடுக, வழியை பார்த்து பார்த்து தேட வைத்து விட்டார் வருண பகவான். எங்களின்  நிழலாய் துரத்திக்கிட்டே இரண்டு மணி நேரம் வந்தார்...

மழையுடன் பாதைகளை அளந்துக் கொண்டிருந்த எங்களுக்கு, சொன்ன நேரத்திற்கு சில நிமிடங்களுக்கு முன்னால் வந்து சேர்கிறது அலைபேசி அலறல்.

"என்னப்பா எங்க இருக்கீங்க ?" - அந்தப் பக்க குரல்
"வந்துக் கொண்டே இருக்கோம் பா" - இது நான்

நேரம் - இரவு / விடியல் - 2.20AM

கொட்டும் மழையில் நனையும் பூப்போல, இந்த பாச மழையில்  நனைந்து நிறைகிறது என் உள்ளம்.. 

அங்க இங்க பாதையை புடிச்சு டீ குடிக்கும் மனசு அலையும் விடியல் நேரம் ஹோட்டலுக்குள் தஞ்சம் புகுந்த எங்களின் கண்கள் ஓய்விற்கு செல்ல, கைகளும் கால்களும் எனக்கும் உனக்கும் சம்பந்தம் இல்லை என்று தனியே பாய்விரித்தது...

வெயில் எழுப்பியது என்னை..
அலைபேசியில் செய்தி " எழுந்தவுடன் கூப்பிடு"

எழுந்துவிட்டேன், படித்துவிட்டேன், அழைக்கிறேன்..

"வினோபா, என்னயா இப்போவே எழுந்திருச்சாச்சா?"
"ஆமாம்பா"
"எத்தனை மணிக்கு வரட்டும்?"
"ஒரு ஒன்பது மணிக்கு ரெடி ஆயிருவேன்"
"சரிப்பா  வரேன்"


குளித்துவிட்டு வெளியே வருகிறேன்.. சட்டைய தேடிக் கொண்டிருக்கிறேன், வாசல் மணி அழைக்க,
அவர் குரல் உள்ளிருக்கும் காற்றுடன் கலைகிறது..

"வினோ"
"இதோ வரேன்ப்பா"

ஒல்லியான உருவம், ஒரு T-Shirt, Jeans, அவ்வளவே..
இதழில் புன்னகை, மனதில் அமைதி, கரம் விரித்துக்கொண்டே வருகிறார்..

ஆரத்தழுவிக்  கொள்கிறோம்... மனசும், பாசமும், சந்தோசமும் தனித்தனியே தழுவிக் கொள்கிறது.. 

அவரின் அனைத்தும், என்னை ஆட்கொள்கிறது எளிமையாய், முழுமையாய் அவரது கவிதைகளைப் போல...

பனி இன்னும் கொட்டும்...

3 Dec 2010

முதல் பனி - 1


அழகிய தமிழ் மணக்கும் கொங்கு நாடான கோவையில், குளிரின் அரவணைப்பில் தவழும் ஒரு குட்டி  போத்தனூரில் வாழ்க்கையை  தொடங்கிவன் நான்...

பள்ளி பருவத்திலிருந்தே கலைகளில் நாட்டம் கொண்ட எனக்கு தீனி போட்டது கல்லூரி. கனவுகள் ஆயிரம் காண் என்றும் திரிந்தவனுக்கு நெகிழ்வுகள் ஆயிரம் அள்ளி தெளித்தது நட்பு...

படிப்பின் மீது கவனம் சிறிதளவில் இருந்தாலும், கூத்து, கிறுக்கல்களின் மீது அதிகம் இருந்தது. இதில் விளைந்ததுவே அகலவியலா நட்புகள். அதனுடே வளர்ந்ததுவே வாழ்க்கை தேவைகளின் மீதான காதலும்.

என்ன தான் நாட்டுப்பற்றும் ஊரின் மீது பிடிப்பும் வலுவாக இருந்தாலும், என் காலங்களில் பல பேர் விதைத்த வெளிநாட்டு மோகம் இல்லாமலும் இல்லை. ஆம், நான் கண்ட கனவு காட்சிகள் எல்லாம் கணினி வழியாக மனதில் குடி கொண்டன...

உலா வந்து கனவுகளில் ஒன்று தான் அனைவரையும் கவரும் வெள்ளை திரள்களில் கால் புதைய நடந்து, ஓடி, ஆடி,  விளையாடும் தருணங்கள். இதோ இனி முதல் பனி பாகம் 1 (அப்பாட முன்னுரையே இவ்வளவா? )

அட இதுக்கு மேல இப்போ ஒன்னும் இல்லைங்க.. வாங்க என் சந்தோசங்களை புகைப்படங்கள் மூலமா...பெரிய வெள்ளை புறா சிறகு விரித்தால்
 

கொட்டும் பனி மழை - 1


 நனையும் மரங்கள்
           

என் வீட்டு சன்னல் வழியாக 


கொட்டும் பனி மழை - 2


கொட்டும் பனி மழை - 3
 
மூன்றாம் தளத்திலிருந்து - 1

மூன்றாம் தளத்திலிருந்து - தரை...
போர்வை போர்த்திய வீடுகள் -1
(மூன்றாம் தளத்திலிருந்து )
 


போர்வை போர்த்திய வீடுகள் -2
(மூன்றாம் தளத்திலிருந்து )
எங்கோ  ஓர் இடத்தில் வெளிச்சம் என்றும் இருக்கும்...

யாழின்  கொண்டாட்டம்...

 


இந்த புகைப்படங்கள் அனைத்தும் என் அலைபேசி மூலம் எடுக்கப்பட்டது.

பனி  இன்னும் கொட்டும்.......

28 Nov 2010

பிறக்கிறது ஓர் மாண


மூன்றாம் நாள்
நிலவொன்று 
எழும் அந்தி வேளையில்
வீசும் மந்திர புன்னகையில்
பிறக்கிறது ஓர் மாண

பொழியும் வெள்ளை
பனி திரள்களை
ஆரத்தழுவும் மனசு
கரம் விரித்து
அள்ளுகிறது அவள்
கற்றுக்கொடுக்கும் நம்
மொழியின் புதிய பரிமாணங்களை...

மொட்டைமாடி  நிலவும்
அம்மா மடி சோறும்
இப்பொழுது
கணினி வழி யூடூபும்
கரண்டி வழி கார்ன் ப்லேக்சுமாய்
மாறிப் போன காவியங்கள்
இங்கே ஆயிரம் ஆயிரம்.....

பிறந்தநாள்  காணும் என் அன்பு நட்புக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்...

டிஸ்கி : மாண - யாழினின் மொழியில் வேண்டாம் என்று பொருள்....

25 Nov 2010

பாட்டு பாடவா...

பத்துபாட்டு அதுவும் பெண்மனசை பெண்குரலில் வெளிப்படுத்தும் கானம் எழுத என்னை அழைத்த நீரோடை மலிக்கா மற்றும் கலியுகம் தினேஷ்குமார் அவர்களுக்கு என் நன்றிகள்....

இதோ எனக்கு பிடித்த பாடல்கள்....

படம்: மெல்ல திறந்து கதவு 
பாடியவர்:  சித்ரா

படம்: மெல்ல திறந்து கதவு 
பாடியவர்: ஜானகி அம்மா...

படம்: நீங்கள் கேட்டவை
பாடியவர்: ஜானகி அம்மா...

படம் : முதல் மரியாதை
பாடியவர் :  ஜானகி அம்மா...

படம்: சிந்து பைரவி
பாடியவர்: சித்ரா

படம்: ஜீன்ஸ்
பாடியவர்: நித்யஸ்ரீ மகாதேவன்

படம்:சத்யம்
பாடியவர்:சாதனா சர்கம்

படம்: பார்த்திபன் கனவு

பாடியவர்: ஹரிணி

படம்:கீரிடம்
பாடியவர்:சாதனா சர்கம்

படம்: ஜூலி கணபதி
பாடியவர்: ஸ்ரேயா க்ஹோசல்


உங்களுக்கு  பிடிக்கும் என்று நம்புகிறேன்.....இதை தொடர நான் அழைக்கும் நண்பர்கள் - சினிமா விமர்சகர்கள்....19 Nov 2010

மிளிர்கிறது


பறந்து வந்த
அந்த முன்னிரவில்
வேர் அசைக்க
தலையாட்டும் மரக்கிளையில்
மழை துளிகள்
சுமக்கும் இலைகள்
முன்னின்று  வரவேற்கிறது
இளங்குயில்களை...

சன்னல்  கண்ணாடியில்
புகை பரவும்
குளிர் இரவில்
பிஞ்சு
விரல்கள் வரைந்த
புன்னகை பொம்மையில்
மிளிர்கிறது யாழின்
இன்பம்....

பனிரெண்டு சுவர்களுக்குள்

தொடங்கப்பட்ட
புதிய அத்தியாயத்தில்
சின்ன
கொலுசுகளில்
பட்டுத் தெறிக்கும்
அவளின்
அப்பா அப்பா
செல்ல சிணுங்கல்களில்
மிளிர்கிறது என்
இன்பம்.....

26 Oct 2010

கிழிக்கப் படாத காகிதம் ஒன்றுவிழுந்த பின்
மேலெழும்பும் குமிழிகளாய்
எரிந்துக் கொண்டிருக்கிறது

பல நடுநிசி இரவுகள்

முத்தமிடுகின்றன
முன் ஜென்மத்தின்
நினைவுகளில் சில பகுதி


விரிக்கும் பட்சிகள்
அலகுகளில் மேவ
புகைக்கும் தருணம்

மனம் கிழிக்க

வந்த  மர்கிறது
கிழிக்கப் படாத
காகிதம் ஒன்று


கோடி யாயினும்
புதிதாய் மையொழுகும்
நாமத்தின் வடிவாய்

கையெழுத்து பிரதியில்

அவன் சொல்லி
என்னுள் கொள்ளி
ஈராறு நாளில்


 

அட...
போனது போகட்டும்
விரியும் வாழ்க்கை
ஐந் தாறு நாளில்!

19 Oct 2010

பின்னொரு நாளில் முடிவில்லா கவிதை...
ஒரு மழை துளி - சிந்திய
துகள்களின் முகைகளில்
அவள் -
உதறிய
புன்னகையின் (ஜ)சரிகைகள்
புகைப்பட பிக்ஸ்சல்களாய்

எதிர்ப்பார்பின் ரகசியங்கள் தித்திக்கும்
ஓர் அந்தியில் ஜனனித்த
அவள் -
காலடி  காட்சிகளில்
கூட்டல் பெருக்கல் கற்கும்
துள்ளிய மானின் சில புள்ளிகள்

முரசு கொட்டி
முப் பணிரெண்டு பௌர்ணமிகளில்...
அவள் - விதைத்த
ஆனந்தத்தின் வலியிலும்
வலியின் ஆனந்தத்திலும்
நிலவின் மடியில்(ன்)
யாசிப்பு பிரபஞ்சம்...

துண்டு துண்டாய்

சிதறிக் கிடக்கும் (என்)
இயமப் பிறழ்வுகளில்
அவள் -
நியமப் புணர்வுகளுள்
வழிந்து நனைக்கும்
யாழின்
அரங்கேற்றங்கள்
பின்னொரு நாளில்!

12 Oct 2010

இதுவும் கடந்து போகும்...!யன்னலில் கசியும் கருமையின்
பிறப்புக்கும் இறப்புக்குமிடையில் - என்
செவிப்பாறை சிதற
துகள்களை இரைத்துக் கொண்டிருக்கும்
அழைபேசி அவலங்களில்
நெஞ்சாங்கூடு அறுபட்ட
தொட்டா சிணுங்கி புழு
சுருண்டிருந்த  பொழுதொன்றில்
நான்
இறந்து போயிருந்தேன்...!

பெரியதோ சிறியதோ   - அறியா
நீளக் குடலுக்குள்
கழுகின் நகக்கங்குகளில் வதைப்பட்டு
கிழியும் நினைவுச் சிறகுகள்
நெளிந்து கடந்து
வளி வழி விரிய
அந்திமங்கள் இரண்டான தருணங்களில்
நான் இறந்து போயிருந்தேன்...!

அன்னக் குழாய்கள் சிதைக்கப்பட
விழி நாணல்கள் - யமியை
கதாநாயகி யாக்கிய கனாக்களை
உமிழ்த்துக் கொண்டிருக்கையில்
மரத்த மதி உரைக்கிறது
இதுவும் கடந்து போகும்...!

-------------------------------------------------------------------------------------
நான் இறந்து போயிருந்தேன் -  கவிதை போட்டிக்காக எழுதியது...


3 Oct 2010

மிதக்கும் நினைவின் கனம்...நினைவின் கனத்தோடு விழும்
மழை துளிகளில்
கலைக்கப்படும் 
குள அலைகள்
மோதும் இருகரைகளில்
அமர்ந்திருக்கிறது துடிக்கும்
மனமிரண்டின் கால் தடங்கள்...

அவள் 
ஏக்கம் பேசும் விழிகள்
சுமக்கும் காகித கப்பல்
மேலும் கீழும் புதைய 
கரை சேருமோ
சுரந்து மிதக்கிறது பதற்றம்
 
இப்பொழுது
பெற்றவள் அப்பா என்கிறாள்
பெற்றவன் அம்மா என்கிறான்
தேவை ஒன்றாகிறது
இருவருக்கும்...28 Sep 2010

நீர் பறவைகள் - கருவேல நிழலில்சில முடிச்சுகள் அங்கு அவிழ்க்கப்பட்டுக் கொண்டிருந்தன.

எங்கோ என்றோ பதியப் பட்ட வரலாற்றின்
புரை ஏறும் அன்பின் கிளைகள் இங்கு இணைத்து கொண்டன..

சுயம் தேடும் பறவையும்.,
அதன் தோள் சாயும் குயிலும்...
மாலை மங்கி சரியத் தொடங்கிய ஓர் இரவில்.....
எதிர்பார்க்கா ஒரு பயணத்திற்கு தயாராகிக் கொண்டிருந்தது.... சொன்னபடி இல்லாமல் முப்பது நிமிடங்கள் முன்னரே வந்து சேர்கிறது நிலவு....

மெல்ல மெல்ல இருள் கவ்வுகிற வேளையில், இங்க இவர்களுக்குள் ஒளி பரவ ஆரம்பிக்கிறது.. ஆம் ஓர் இனம் புரியா நட்பொளி....

******************************************************************
வட மேற்கு திசையில் ஓர் குடிசையிலும்,
மத்திய கிழக்கில் ஒரு மண் வீட்டிலும்,
ஒளியும் ஒலியும் உள்ளங்களை இணைத்துக் கொண்டிருக்கிறது.
பறவை "சொல்லுங்க" என்கிறது..!
நிலா "நலமா" என்று புன்னகைக்கிறது,
பதில் குயில் பாடுகிறது.........!!
******************************************************************

தொடங்கிய குரலில் மற்றொன்று முடிக்க,
அதை இன்னொன்று எடுக்க நிமிடங்கள் செத்துக் கொண்டிருந்தது
மூளையில் முளைக்கவில்லை...

குடும்பம் என்பான், கவிதை என்பான், கதை என்பான், நடை என்பான், வகை என்பான்.. அங்கங்கே நேசன் எட்டிப்பார்க்கிறார், பா ரா பாசம் பொழிகிறார், கடல் புறாவும் சிவாஜியும் சிறகுகள் விரிக்கின்றனர். இவைகளில் வாழ்ந்துக் கொண்டிருக்கின்றன முன்று உயிர்கள்...

மணி நள்ளிரவை தாண்டி வேகம் பிடிக்கறது.

தோள் சாயும் குயிலுக்கு அங்கே விடிகிறது
இருபத்தி ஆறாவது முறையாக அவர் உலகினை கண்ட தினம்...

அடடா என்ன ஒரு அழகிய தருணம்.. முதன் முதலில் இணைகிற மனங்கள், ஆயிரம் ஆயிரம் நிமிடகள் பழகிய உணர்வுகள், இவை அனைத்தின் ஒரு துள்ளலில் வழிகிறது வாழ்த்து... பிறந்த நாள் வாழ்த்து..

******************************************************************
ஒரு பக்கம் குயில்கள் நிக்கோடின் புகைகளுக்கு உயிரை கொடுத்துக் கொண்டிருக்கின்றன..
புகைகளும் புன்னகைகளும் ஒன்று ஒன்று சேர.,
இந்த பக்கம் நிலவுக்கு புரையேறிக் கொண்டிருந்தது ஆனந்தத்தில்..
******************************************************************

குயிலுக்கு பிடிமனம், பறவைக்கும் கவிமனம், நிலவிற்கோ அன்பின் பயணம்.

எத்தனை எத்தனை விவாதங்கள், பாசத்தின் பரிமாணங்கள் வழிந்து ஓடிக் கொண்டிருக்கிறது எங்கள் நட்பின் ஆழம்..!

வடிந்துக் கொண்டிருந்தது நொடிகள்..

அலை அலையாய் எண்ணங்களில் மிதக்கிறது எங்கள் இதயங்கள்.

அன்று கருவேல நிழலில் போடப்பட்ட பல முடிச்சுகளில் சில இன்று நேசத்தில் இறுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.....

பி.கு - இந்த உறவுக்கு வித்திட்ட தங்கை மஹாவின் அழை பேசி பிறந்தநாள் வாழ்த்துக்களும் தோள் சாயும் குயிலுக்கு சொல்லப்படுகிறது இந்த பதிவின் மூலம்...

27 Sep 2010

தொடுகோடு1.
ஒரு பெண்
ஒரு மகள்
மூன்று பெண்...2.
யன்னல்
மனசு
கட்டியணைப்பு
நேர்கோடு...3.
ஒரு ராஜகுமாரி
ஒரு ராஜகுமாரன்
அவர்களுக்கு
ஒரு ராணி...
.

19 Sep 2010

வாழி னிக்கும்தொடரும் அலை
மனப் பாறை
முட்டி
ஈரக் காயம்
கரைய
சுமக்கும் மனசு
நினைவுக் கடல்
அனைத்தும் கடக்கும்

நீல மங்கை
முத்துக் குவியல்
யாழ் னகை
அள்ள ததும்பா
மகளும்
பெற்றவளும்
வழி புரியும்

நேச உஷ்ணம்

செதுக்கும் வைரம்
பனிக் கோடை
காலம்
யன்னல்
இடுக்கு ழையும் 
நொடிகள்

தினம் நகரும்
பறவை
தரை தேடும்
பார்வை
கரு விரியும் 
வாழி னிக்கும்

15 Sep 2010

வீடும் என் சமையலும் - 1


உடுத்த உடை
உண்ண உணவு
இருக்க இடம்...

தினம் தினம் நடக்கும், புழங்கும், பழகும், கடக்கும் பல தரப்பட்ட விசயங்களில் ஊட நம் வாழ்க்கை. முக்கிய விசயங்களான வீடும்,  சமையல் என்ற பெயரில் நான் அடிக்கும் கூத்துமே இந்த பதிவு...

நான் இப்போ குடிபுகுந்திருக்கிற வீடு, 64 வீடுகள் கொண்ட  நாலு அடுக்கு  மாடி கட்டிடத்தில் முதல்  மாடியில்  உள்ளது... கட்டிடத்தின் பின்புறம் மரத்திலான அழகான நடைமேடை, குட்டி குட்டி பூந்தோட்டம், குழந்தைகள் (என்னை மாதிரி) துள்ளி திரிந்து சிறகு விரிக்க விசாலமான இடம், வண்டிகளுக்கு தனி இடம் என்று சகல வசதிகளை தன்னுள் அடக்கி வைத்திருக்கும் குடியிருப்பு. அதில், ஒரு படுக்கை அறை கொண்ட ஒரு வீட்டை என்னை நம்பி ஒப்படைத்திருக்கிறார் வீட்டின் முதலாளி (அவருக்கு கொஞ்சம் நிறைய தைரியம்... என்ன பண்ண).

வாங்க வீட்டைச் சுற்றிப்பார்க்கலாம்..

ஒரு சாயலில் Studio Apartment முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. வரவேற்பறையும், சமையலறையும், சாப்பிடும் இடமும் ஒரே அறையில் தடுப்பு இல்லாமல் சேர்ந்தாற்ப்  போலவும், மற்ற அறைகள் தனித்தனியே அமைந்துள்ளது. இந்த மாதிரி வடிவமைப்பு எனக்குப் புதுசு... 

    சன்னல் இடை
          சில்லென காத்து
                சின்ன பயல பாத்து
                       சிங்கார பாட்டு
                             சிற்றோடை மனசு
                                      சீட்டாட்டம் போடுதே! 

நீங்களே பாருங்க சன்னல் வழியே...                  ஆமாங்க, இந்த பதிவுக்கு விதையே இந்த பெரிய கண்ணாடி சன்னல் தாங்க... எழில் கொஞ்சும் அந்த  வரப்பிரசாதத்தை. விழிகளில் தவழும் இயற்கையின் புன்னகைகளை என்னின் ஒவ்வொரு அணுவிற்கும்   புகட்டிக் கொண்டிருக்கும் கவிதைகளே இந்த சன்னல்......

மெலிதாய் தன் பின்னிடையைக் காட்டும் வீடுகள், அதையும் தாண்டி  தன் வனப்பை வளித்து படுத்துக்கொண்டிருக்கும் மலை, அதனை பச்சை வண்ண பட்டுத் துணியால் போர்த்தியது போன்ற பசுமை நிறைந்த  காடுகள்... விழிகளை கொள்ளைக் கொள்ளும் பரிசுகள்... 

அங்கிருந்து பார்த்தால், தனிமையில்  அமர்ந்திருக்கும் மரபெஞ்ச் நமக்குப் பல கவிதைகளை கொட்டும்...                    மழை  குடிக்கொண்டிருக்கும் நாட்களில் சன்னல் கண்ணாடிகளில் வலம் வரும் துளிகளில் பயணிக்கிறது மனசு... 
அது ஒரு கார் காலம் கண்ணே... 

தனிமையொத்த நிமிடங்களில் சன்னலில் தலை சாய்ந்துக்  கொண்டிருக்கிறது மனசு... 

அப்படியே இந்த பதிவை படிக்கும் மனதோடும் உறவாடிக் கொண்டிருக்கிறது..

9 Sep 2010

கடலோர நடை பயணம் 2

கடலோர நடை பயணத்தின் முதல் நடை மிக நீளமான அருமையான  உணர்வாக அமைந்தது.  இந்த இரண்டாவது பயணம் கொஞ்சம் வித்தியாசமானப் பயணம். எப்படீன்னு நீங்க கேட்கிறது புரியுது.  

வாங்க நாம நடக்கலாம்...

போன ஞாயிறு Portrush என்கிற ஊர்ல, விமானக் கண்காட்சி நடந்தது. அதுக்கு  போக முடிவு செய்தோம்.

காலையில் 9.40க்கு புகைவண்டி. கொஞ்சம் கூட பொறுப்பில்லாம 9.10க்கு வரைக்கும் நான் கிளம்பல. அவசர அவசரமா கிளம்பிப் போனா! வண்டி வர சில நிமிடங்கள் இருந்தது. அப்ப தான் தோணிச்சு, கையில இருக்கிற காசு பயணச்சீட்டுக்கு பத்துமா? பத்தாதான்னு?. சரி, ரிஸ்க்க ரஸ்க்கா சாப்பிடுற பரம்பர இல்லையா, வண்டியில ஏறியாச்சு. அடுத்த நிறுத்தத்தில், வேற வண்டி மாறனும் அப்படின்னு சொன்னங்க. சரி கிடச்ச gapla காசு எடுக்க ஓடினேன். ஒலிம்பிக் தங்க மெடல் வாங்கிற வேகம். பாதி தூரம் போகும் போது தான் பார்த்தேன், வண்டி கிளம்ப மணி ஆச்சுன்னு.  நம்ம நண்பர் வேற என்னை அழைபேசியில் தேடுகிறார். பின்ன என்ன பண்ண, ரெண்டு மெடல் வாங்க அது விட வேகமா வண்டிக்கு வரதுக்குள்ள என் வயற்றில் இருந்ததெல்லாம் வாய் வழி எட்டிபார்க்க துடிச்சுது.

அப்புறம் காசு போதுமானதா இருந்தது. அங்க போனா, கண்காட்சி கண்றாவியை விட கன்றாவியா இருந்தது. நம்ம ஊர்ல நடக்கிறதே நல்லா இருக்கும்.

அதனால, அங்கிருந்து Londonderryக்கு போலாமுன்னு முடிவு. இங்க தாங்க நம்ம பயணம் தொடங்குது.    

Portrushலிருந்து Londonderryக்கு சுமார் 75 நிமிடங்கள் பயணம்.

இயற்கை  நமக்குத் தரும் மகிழ்ச்சிக்கு அளவே கிடையாது இல்லையா? போகும் வழியின் இருபுறமும் என்னை இழுத்து  போட்டு மனசில் படம் பிடிக்க வைத்தது இயற்கை.

ஒரு பக்கம் பச்சை பசேலுன்னு வயல்கள், விதைகளுக்கு காத்திருக்கும் வயல்கள். 

இன்னொரு  பக்கம் கடலும் அதன் மணலும் எங்க  எந்த இடத்தில் பின்னிக் கொள்கிறது என்று தெரியாத  அளவிற்கு  அப்படி  ஒரு அற்புதமான  பினைவுக் காட்சி.
    
விழி வழி விருந்து உட்கொண்டே போனது மனசு. 
நம்ம ஊட்டி  மலை  புகை வண்டி பாதையில குகைகள் வருமே அந்த மாதிரி  இந்த பாதையிலும் மூன்று  குகைகள். குகைகளுக்குள்ள என்ன அழகுனா, இந்த பக்கம் நம்மளோட பயணிக்கும் கடல், இருங்க நான் வந்திடுறேன்னு சில வினாடிகள் ஓய்வு  எடுக்க மறைந்து போகும் உணர்வு. 

இன்னொரு அழகும். நானும் உங்களை வரவேற்க தயார இருக்கிறேன்னு சொல்ல இருண்ட மேகங்களை பிழிய காத்திருந்தது வானம்.

இப்போ Londonderry பற்றி 

Northern Ireland எல்லை  பகுதியில்  இருக்கும் அழகோவியம். இதை தாண்டினால் Ireland வந்துவிடும். 

அடர்த்தியான வீடுகள், குறுகிய சாலைகள்,  மேற்கத்திய நகரங்களுக்கே உரிய  நகர் அமைப்பு. கடலை முத்தமிட்டுக் கொண்டிருக்கும் உலக வரைப்படத்தில்  ஒரு குட்டிப் புள்ளி. 

இந்த  ஊரை  சுற்றி  கோட்டை  மதில்  சுவர் கட்டி இருக்குங்க. சுமார் 2kms சுற்றளவு. நகரின் மையப் பகுதிகளை சுற்றி கட்டப்பட்டுள்ளது. நாங்க சுமார் ஒரு மணி நேரம் புகைப்படங்களுக்கு  தீனி போட்டுக் கொண்டே சுற்றி வந்தோம்.  இந்த மதில் சுவரை சுற்றி வருவதே ஒரு காதல் வயப்படும் உணர்வு. எத்தனை எத்தனை மனிதர்கள்? இளையவர்கள் முதல் வயதானவர்கள் வரை, அன்பை காட்ட ஒரு அருமையான இடம்.

இயற்கை அன்னை எனக்களித்த அமிர்தத்தின் ஒரு துளியை புகைபடங்கள் வழியே புசித்துக் கொண்டே நடந்தோம். மாலை வேளையில் வானம் மெல்ல தன்  அன்பு துளிகளை தூவ.. 
அற்புத விடியல்கள் ஒவ்வொரு துளிகளிலும்...
ஒரு நதிக்கரையோரம்  பறக்க  சிறகு  விரித்தது மனசு. அதனுடன்  நடக்க தயாரானது  கால்கள். 

இப்படியும் நம் உலகத்தை சுவாசிக்கலாம்....

6 Sep 2010

செந்நிற தூறல்கள்வானவில்லிற்கு முந்தைய தருணங்கள்
வெள்ளி மணிகள்
செந்நிற தூசிகள் - அவள்
நினைவுகளின் தூறல்கள்!

நிசப்தமான மர அமர்வு - தனித்த
நிழலுடன் உரையாடுகிறது
வான் வளி வழி
துரத்தில் நட்சத்திரம் - இரண்டு

ஈரம் படிந்து
அரிக்க தொடங்குகிறது
மனசு -
அலைகளாய் நினைவுகள்

இருதயத்தின் நாடிகள்
குடிபுகு முகபாவங்கள்
என்னுள் வரையப்படும் - அவள்
இதழ் ஓவியங்கள்...

31 Aug 2010

கடலோர நடைப் பயணம்


நீல மங்கை கைகோர்த்து நடந்து பழக கற்றுக்கொடுத்து, கூட நடந்த தருணங்கள்.. இவையே இனி...

இங்கிருந்து (Belfast) சுமார் 20 கீ.மீ. தூரம் போனால் ஒரு சின்ன தீவு மாதிரியான ஊரு (Bangor). அங்கே தாங்க இந்த நடைப்பயணம்.. Bangor பற்றி  அடுத்த  பத்தியில் பார்ப்போம். .. 

இப்போ அங்கே போன அனுபவத்தை.. 

திங்கள் காலை சுமார் 10.30 மணிக்கு புகை வண்டிப் பிடித்தோம்.. 

ஒரு மணி நேர பயணம். நம்ம ஊரு பேரூந்து மாதிரி, வண்டியில்  ஏறிய  பின் தான் பயணச்சீட்டு வாங்க முடியும். ஏன்னா இங்கே  ஏறிய  நிலையத்தில் யாரும் இருக்க மாட்டாங்க. ஏதும் இல்லை நடைமேடைத் தவிர. ஒரு நாள் பயணச்சீட்டு வாங்கிட்டு வண்டியில் அமர்ந்தோம்.. என்ன அருமையான வண்டி… நம்ம ஊரு மூன்றாம்  ஏ சி கூட இப்படி இல்லைங்க. சுத்தம், பஞ்சு இருக்கைகள், சத்தம் இல்லா , ஆட்டம் இல்லா பயணம்.. அப்படியே இயற்கையை ரசிச்சிக்கிட்டுப் போனோம்.. வழிமுழுவதும்  கடலோரமா  தான் போனது வண்டி.   

Bangor ஒரு சின்ன தீவு மாதிரியான ஊர். சொகுசு படகுகள் வாங்கி விடுமுறைகளை பொழுது கழிக்கும் மக்களும், அவர்களின் படகுகளும் காலம் போக்கும் இடம். அழகிய இடம்..

Bangorல் இருந்து ஒரு 6கீ.மீ. கடலோர சுத்தமான நடைபாதை, எந்த சத்தமும்   இல்லை, கடலின்  இசையைத் தவிர.. 

காலையில சரியா சாப்பிடலை.. அதனால கொஞ்சமா ( ஒரு முழு ப்ரைய்டு கோழி, 18 சிப்ஸ் பாக்கெட்ஸ், இப்படி ஒரு 2000 ரூபாய்க்கு) சாப்பிட வாங்கிட்டு நடக்க ஆரம்பிச்சோம்... 

நகரத் தன்மையிருக்கிற இடங்களைத் தாண்டி பாதையை பிடிச்சு தனிமை நிறைந்த நிழல் கிடைக்கவும், கோழி கூவுறது கேட்க, சாப்பிட அமர்ந்தோம். வாங்கிட்டு வந்ததுல பாதியை காலிப் பண்ணிட்டு, திரும்பவும் நடக்க ஆரம்பித்தோம். 

இங்க நம்ம நண்பர்  சூரியன்  பற்றியும் சொல்லணும். அவருக்கு என்ன  தோணிச்சோ, மக்க நாள் முழூவதும்  எங்களுக்கு  உடம்பு  சுடாத  தரிசனம்  தந்தாரு. அதனால
வருண  பகவானுக்கு Holiday. 

பல வகை படகுகள் வளம் வருவதை  பார்க்கும் அழகே அழகு. கால் நனைக்கும் வயதான மனிதர்கள், துள்ளி  குதிக்கும்  இரண்டு  வயது  குட்டி  பாப்பா, தனிமை விரூம்பிகள், காதல் கதை பேசும் ஜோடிகள், தன் குழந்தையை வயிற்றில் சுமக்கும் பெண், துடுப்பு படகு ஓட்டும் சின்ன பெண், அவளை ஆர்வத்துடன் பார்க்கும் அப்பா, கொஞ்சம் கவலையுடன் பார்க்கும் அம்மான்னு, இப்படிப் பல காட்சிகளுடன், பல தரப்பட்ட  முகங்களுடன்  எங்கள் நடை..... 

இதுல ஒரு விஷேசம்... அனைவரும்  வணக்கமும், புன்னகையும்  நமக்கு  தந்து விட்டுத் தான் போவார்கள்.. எத்தனை எத்தனை புன்னகைகள். இதுவல்லவோ எங்கள் சத்து 6 கீ.மீ. நடைக்கு.. 
இன்னொரு விஷயம்.. எத்தனை  விதமான  மனிதர்களைப்  பார்க்க  முடிகிறதோ, அத்தனை விதமான செல்ல  பிராணிகளையும்  பார்க்கலாம்..  அனைத்தும் நல்ல பயிற்சி பெற்றவை.. (எதுவும்  செய்யல எங்களை). 

வசீகரம்  குறையா  கன்னிப்  பாவையின் அத்தனை நளினங்களும் தந்தாள்  இந்த  நீல மங்கை எங்கள் நடை  பயணத்தில்..   
வளைந்து, நெளிந்து, நின்று, நிமிர்ந்து, ஏறி, இறங்கி, குலுங்கி, குறுகி, இப்படி பலப் பல நளினங்கள்.. எங்களுக்கு விருந்து  படைத்தாள்   தண்ணீர் அரசி ..              

ஆட்டம், பாட்டம், ஓட்டம், நடை, களைப்பு, தூக்கம், சிரிப்பு, கைதட்டல் இப்படி மாறி மாறி பொழிந்த வண்ணம் தொடர்ந்தது எங்கள் பயணம்..

25 Aug 2010

சுனை உறவு
*******************************************
திக்கற்ற திசை
நம்பி வாழ்
நீளக் கரம்...
*******************************************

பதின்மத்தில் மூளையில் முளைக்கும் இளமையின் வேட்கையின் முதல் படி. நேசத்தின் அளவுகோளின் உயரம் சற்றே தடுமாறிப் போகும் கணங்களில் பிடித்து தட்டி நிறுத்தும் கரங்களுக்கு வாழ்வை ஒப்படைத்து நாட்கள் நகருகின்றன.

ஈராறு வருடங்களுக்கு பின்னோக்கி பயணக்கிறது நினைவுகள். கல்லூரி மண் மிதித்து சில இடர்களைத் தாண்டி மெல்ல எழுந்த எட்டுதிசையின் புள்ளிகளில் மணக்கிறது எங்கள் கோலம்.

*******************************************
ஏழல்ல எட்டு
நாம் சேர
திரியும் வில்...
*******************************************

இனம் அறிந்து மொழி புரிந்து இணைகிற உள்ளங்கள். உள்புகு மென்மையை வருடிச் செல்லும் நிகழ்வுகள். நிஜங்களின் அருகாமையில் பிணைகிறது ஒரு இசை. இசையில் நுகர்கிறோம்.

கானகத்தில் கடுங்குளிரும் பெரும் மழையும் மாறிப் பொழியும் பொழுதுகளுக்கு நடுவில் வசந்தங்களின் அரவனைப்புகளும் தழுவக் கண்டோம்.

வாதங்களும் விவாதங்களும் சிரிப்புகளும் சிற்சிறு உரசல்களும் யுகங்களை விழுங்க வைகறை வேளையில் ததும்பும் புன்னகைகளே விடியல்கள்.

*******************************************
கண்கள் வழி ஊட
இருதயம் புக பரவ
இதழ் தூவ நகை...
*******************************************

முழுமதியை ஒரு எண்பது முறை கண்டிருப்போமா? மதியில் இல்லை... ஆனால் எங்கள் அரட்டைச் சிறகுகள் கண்டு நிலவு ஒதுங்கிய இரவுகளே இன்னும் ஞாயாபகத்தில்...

அன்றில் பறவைகளாய் துள்ளித் திரிய இல்லை இன்பம். நட்பின் மாமனும் மச்சானும் அக்காவும் சித்தியும் எங்களுக்குமாய் அமைய கண்டே வடிந்ததே வாழ்க்கை.

ஆடி பிறக்க ஞாயிறு அழைக்க மூன்று ஆண்டுகளாய் விதைத்த செடியொன்றின் விழுதுகளின் ஆழத்தில் மணக்கிறது எங்கள் நட்பின் இறுக்கம்.

*******************************************
அரும்ப கவி
ஆழ நேசம்
படர் நிம்
மதி வெண்...
*******************************************

பேருந்து பயணம், வீதியோர நடை, வயல்வரப்பு அமர்வு, தாகம் தணிக்கும் ஓடை, தோள் சாய தோழி, வளரும் பாசம்.

கனவுகள் பல கவிதைகள் பல கனத்து கரைந்து போகும் தருணங்களைத் திரும்பிப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். அவன், நான் அப்பா என்கிறான். அட, அவள் நானும் அம்மா என்கிறாள்.
அடடா, இப்போ நானும் அப்பா...

*******************************************
காலம் நடை
வயது விடை
கனியும் உறவு...
*******************************************

இன்னும் சுரந்துக் கொண்டிருக்கும் நட்பு....

19 Aug 2010

ஒன்றும் இரண்டும் மூன்றானது
பங்குனியில் விதைக்க
ஆவணியில் முளைக்க
ஞாயிறு அட்சதைத் தூவ
ஒன்றும் இரண்டும் மூன்றானது

நமக்குள்
பிடிக்க
அடிக்க
அழ
தேட
தவிக்க
கரைய
சாய்க்க
அணைக்க
மலர

உனக்கென
நினைவு
கவிதை
நேசம்
காதல்
வாழ்வு

இதுவே நிஜமானது

உற்றவள் நீயும்
நமக்கென அவளும்

தொடங்குவதுமில்லை
முடிவதுமில்லை
நீங்களில்லாமல்... 


18 Aug 2010

உமா சங்கருக்காக அரசுக்கு ஒரு கண்டனம்

தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை:
இந்திய ஆட்சிப்பணியில் சேர்வதற்காக செ.உமாசங்கர், தனது இருப்பிடம், மதம் ஆகியவற்றை மாற்றி ஆதி திராவிட இனத்தைச் சார்ந்தவர் என்று தவறான சாதிச் சான்றிதழ் பெற்றுள்ளார் என்ற புகார்களின் அடிப்படையிலும், அவர் படித்த பள்ளி, கல்லூரி, தேர்வு இயக்ககம் மற்றும் தொடர்புடைய அலுவலகங்கள் ஆகியவற்றிலிருந்து பெறப்பட்ட ஆவணங்களின் அடிப்படையிலும், அனைத்திந்திய ஆட்சிப் பணி (ஒழுங்கு மற்றும் மேல்முறையீடு) விதிகள், 1969-ல் மாநில அரசுக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தின் அடிப்படையில் இவர் தொடர்ந்து பணியில் நீடிப்பது பொதுநலனுக்கு உகந்தது அல்ல என்பதாலும், இதுதொடர்பாக ஒழுங்கு நடவடிக்கை மற்றும் உரிய அமைப்பின் மூலம் விசாரணை மேற்கொள்ள இருப்பதாலும் உமா சங்கர், அரசால் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளார். 

என் கண்டனங்கள் 
உமாசங்கர் I.A.S. இதுவரை அதிகாரியாக சென்றவிடமெல்லாம் நல்ல பல சேவைகளை மக்களுக்கு அளித்தவர் என்பது வெள்ளிடை மலை.  புதிய திட்டங்கள், செயல் முறைகள் என்று தனக்கென ஒரு பாணியில் நற்பணி செய்து வந்த அவருக்கு இன்றைய அரசு அளித்துவரும் "தண்டனை" , அதற்குரிய காரணம் எல்லாமே என் போன்ற ஒரு குடிமகனுக்கு மிகுந்த வருத்தத்தை அளித்துள்ளது.

அரசு இது போன்ற அதிகாரிகளுக்கு தண்டனைகளைத் தருவதற்கு என் ஆழ்ந்த வருத்தத்தையும், கண்டனத்தையும் இவ்விடுகை மூலம்  தெரிவித்துக் கொள்கிறேன்.
 
உமா சங்கர் அவர்களை ஆதரிக்கும் பதிவுகள் 

உங்கள் கண்டனத்தை இங்கும் கையெழுத்தாக பதியுங்கள்

17 Aug 2010

ஈங்ங்கங்ங்கிகி.....அஆஆ...அப்பாவேலை வன்ம பளு
தனிமை உளி விரக்தி
கருத்தரிக்க பிரசவம் கிறுக்கல்
திங்கள் வெள்ளி இருள்
சனி விடியல் என்அகம்
பத்தும் எட்டும் சேர
“ஈங்ங்கங்ங்கிகி.....அஆஆ...அப்பா”
மழலை மொழி எனை
பெற்றெடுக்க
யாழ்முகம்...

14 Aug 2010

ஒற்றைப் புள்ளி கோலம்பதிவுலகில் நான் என்னும் தொடர் பதிவிற்கு என்னை அழைத்த நண்பர் கமலேஷ்க்கு நன்றி.
 
1. வலைப் பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?

வினோத்

2. அந்தப் பெயர்தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை என்றால் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?

வினோத் தாங்க உண்மையான பெயர்.

3.
நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்து வைத்தது பற்றி?

எதிர்பார்ப்பின் ஏமாற்றங்களும்
என் தனிமை தனிமையை உணர்ந்த தருணங்களும்
பிரசவம் பார்த்த கிறுக்கல்களை
நிலவின் மடியில் சேமித்து வைக்க

4. உங்கள் வலைப் பதிவை பிரபலமடையச் செய்ய என்னவெல்லாம் செய்தீர்கள்?


இந்து மாகடலில்
ஒரு துளியை விதைத்திருக்கிறேன்..
அறுவடையில் தெரியும்...

போங்க அண்ணே... பிரபலமா .. அப்படினா ?

5.
வலைப் பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்? அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?
 
நினைவுகள் நித்திரைகளை
கொணர்ந்த பொழுதுகளில்
கிள்ளி எடுத்து துள்ளி குதிப்பது
கிறுக்கல்களே.... 

காரணம்:
என்றேனும் திரும்ப
என்னை கைப்பிடித்து
அழைத்துப் போக
வாழும் என் சுவாசங்களுக்காய்....
 
6.
நீங்கள் பொழுது போக்கிற்காக பதிவுகளை எழுதுகிறீர்களா? அல்லது பதிவுகள் மூலம் சம்பாதிப்பதற்காகவா?
 

இரைந்து விட்டு தலை கவிழ...
இழந்து விட்டு மனம் குமற..
திரும்ப தொடுக்கும்
கேள்விகளுக்கு மட்டுமே...

சம்பதிப்பதெல்லாம் நட்பின் உறவுகளே....

7. நீங்கள் எத்தனை வலைப் பதிவிற்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப் பதிவு? 

ஒற்றைப் புள்ளி கோலம் போட்டு
அழகு பார்த்துக்கொண்டிருக்கிறேன்  

8. மற்ற பதிவர்கள் மேல் கோபம், அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆமாம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?

இரண்டும் இல்லை..

ஆனால் பலரின் படைப்புகளிலிருந்து மீளமுடியாமல் தவித்திருக்கிறேன்...
 

9. உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டை பற்றி?

என்னை எழுத தூண்டியவர் தம்பி சிவாஜி

முதல் பின்னூட்டத்தின் மூலம் கைகுலுக்கியவர் – என் நண்பர் உதய்...

என் எழுத்துகளையும், என்னையும் அறிமுகபடுத்தியவர் KRP செந்தில் அண்ணன்

நேரில் பாராட்டியது எனது தோழி....  

10. கடைசியாக- விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டியது அனைத்தையும் கூறுங்கள்.

பல எழுத்துக்களின் வாசகனாய் –என்
எழுத்துகளின் விமர்சகனாய்...
பதிவுலகத்தில் ஒரு அழகிய சருகாய்...
நட்பின் வாசனையாய்
பூக்குவே ஆசை...

இத்தொடர் கோலத்தில் இன்னும் கொஞ்சம் அழகு சேர்க்க நாடும் நேசக்கரங்கள்

MANO      

10 Aug 2010

நான் நீ அலை

 
 
கண் முன்னே பரந்து விரியும் கடல்
நாளங்கள் ஊட வளி
உனை தோள் அணைக்க‌ துழாவும் கரம்
இப்பொழுது
மூன்றாம் மனிதனாகிறது அலை