28 Sep 2010

நீர் பறவைகள் - கருவேல நிழலில்சில முடிச்சுகள் அங்கு அவிழ்க்கப்பட்டுக் கொண்டிருந்தன.

எங்கோ என்றோ பதியப் பட்ட வரலாற்றின்
புரை ஏறும் அன்பின் கிளைகள் இங்கு இணைத்து கொண்டன..

சுயம் தேடும் பறவையும்.,
அதன் தோள் சாயும் குயிலும்...
மாலை மங்கி சரியத் தொடங்கிய ஓர் இரவில்.....
எதிர்பார்க்கா ஒரு பயணத்திற்கு தயாராகிக் கொண்டிருந்தது.... சொன்னபடி இல்லாமல் முப்பது நிமிடங்கள் முன்னரே வந்து சேர்கிறது நிலவு....

மெல்ல மெல்ல இருள் கவ்வுகிற வேளையில், இங்க இவர்களுக்குள் ஒளி பரவ ஆரம்பிக்கிறது.. ஆம் ஓர் இனம் புரியா நட்பொளி....

******************************************************************
வட மேற்கு திசையில் ஓர் குடிசையிலும்,
மத்திய கிழக்கில் ஒரு மண் வீட்டிலும்,
ஒளியும் ஒலியும் உள்ளங்களை இணைத்துக் கொண்டிருக்கிறது.
பறவை "சொல்லுங்க" என்கிறது..!
நிலா "நலமா" என்று புன்னகைக்கிறது,
பதில் குயில் பாடுகிறது.........!!
******************************************************************

தொடங்கிய குரலில் மற்றொன்று முடிக்க,
அதை இன்னொன்று எடுக்க நிமிடங்கள் செத்துக் கொண்டிருந்தது
மூளையில் முளைக்கவில்லை...

குடும்பம் என்பான், கவிதை என்பான், கதை என்பான், நடை என்பான், வகை என்பான்.. அங்கங்கே நேசன் எட்டிப்பார்க்கிறார், பா ரா பாசம் பொழிகிறார், கடல் புறாவும் சிவாஜியும் சிறகுகள் விரிக்கின்றனர். இவைகளில் வாழ்ந்துக் கொண்டிருக்கின்றன முன்று உயிர்கள்...

மணி நள்ளிரவை தாண்டி வேகம் பிடிக்கறது.

தோள் சாயும் குயிலுக்கு அங்கே விடிகிறது
இருபத்தி ஆறாவது முறையாக அவர் உலகினை கண்ட தினம்...

அடடா என்ன ஒரு அழகிய தருணம்.. முதன் முதலில் இணைகிற மனங்கள், ஆயிரம் ஆயிரம் நிமிடகள் பழகிய உணர்வுகள், இவை அனைத்தின் ஒரு துள்ளலில் வழிகிறது வாழ்த்து... பிறந்த நாள் வாழ்த்து..

******************************************************************
ஒரு பக்கம் குயில்கள் நிக்கோடின் புகைகளுக்கு உயிரை கொடுத்துக் கொண்டிருக்கின்றன..
புகைகளும் புன்னகைகளும் ஒன்று ஒன்று சேர.,
இந்த பக்கம் நிலவுக்கு புரையேறிக் கொண்டிருந்தது ஆனந்தத்தில்..
******************************************************************

குயிலுக்கு பிடிமனம், பறவைக்கும் கவிமனம், நிலவிற்கோ அன்பின் பயணம்.

எத்தனை எத்தனை விவாதங்கள், பாசத்தின் பரிமாணங்கள் வழிந்து ஓடிக் கொண்டிருக்கிறது எங்கள் நட்பின் ஆழம்..!

வடிந்துக் கொண்டிருந்தது நொடிகள்..

அலை அலையாய் எண்ணங்களில் மிதக்கிறது எங்கள் இதயங்கள்.

அன்று கருவேல நிழலில் போடப்பட்ட பல முடிச்சுகளில் சில இன்று நேசத்தில் இறுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.....

பி.கு - இந்த உறவுக்கு வித்திட்ட தங்கை மஹாவின் அழை பேசி பிறந்தநாள் வாழ்த்துக்களும் தோள் சாயும் குயிலுக்கு சொல்லப்படுகிறது இந்த பதிவின் மூலம்...

27 Sep 2010

தொடுகோடு1.
ஒரு பெண்
ஒரு மகள்
மூன்று பெண்...2.
யன்னல்
மனசு
கட்டியணைப்பு
நேர்கோடு...3.
ஒரு ராஜகுமாரி
ஒரு ராஜகுமாரன்
அவர்களுக்கு
ஒரு ராணி...
.

19 Sep 2010

வாழி னிக்கும்தொடரும் அலை
மனப் பாறை
முட்டி
ஈரக் காயம்
கரைய
சுமக்கும் மனசு
நினைவுக் கடல்
அனைத்தும் கடக்கும்

நீல மங்கை
முத்துக் குவியல்
யாழ் னகை
அள்ள ததும்பா
மகளும்
பெற்றவளும்
வழி புரியும்

நேச உஷ்ணம்

செதுக்கும் வைரம்
பனிக் கோடை
காலம்
யன்னல்
இடுக்கு ழையும் 
நொடிகள்

தினம் நகரும்
பறவை
தரை தேடும்
பார்வை
கரு விரியும் 
வாழி னிக்கும்

15 Sep 2010

வீடும் என் சமையலும் - 1


உடுத்த உடை
உண்ண உணவு
இருக்க இடம்...

தினம் தினம் நடக்கும், புழங்கும், பழகும், கடக்கும் பல தரப்பட்ட விசயங்களில் ஊட நம் வாழ்க்கை. முக்கிய விசயங்களான வீடும்,  சமையல் என்ற பெயரில் நான் அடிக்கும் கூத்துமே இந்த பதிவு...

நான் இப்போ குடிபுகுந்திருக்கிற வீடு, 64 வீடுகள் கொண்ட  நாலு அடுக்கு  மாடி கட்டிடத்தில் முதல்  மாடியில்  உள்ளது... கட்டிடத்தின் பின்புறம் மரத்திலான அழகான நடைமேடை, குட்டி குட்டி பூந்தோட்டம், குழந்தைகள் (என்னை மாதிரி) துள்ளி திரிந்து சிறகு விரிக்க விசாலமான இடம், வண்டிகளுக்கு தனி இடம் என்று சகல வசதிகளை தன்னுள் அடக்கி வைத்திருக்கும் குடியிருப்பு. அதில், ஒரு படுக்கை அறை கொண்ட ஒரு வீட்டை என்னை நம்பி ஒப்படைத்திருக்கிறார் வீட்டின் முதலாளி (அவருக்கு கொஞ்சம் நிறைய தைரியம்... என்ன பண்ண).

வாங்க வீட்டைச் சுற்றிப்பார்க்கலாம்..

ஒரு சாயலில் Studio Apartment முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. வரவேற்பறையும், சமையலறையும், சாப்பிடும் இடமும் ஒரே அறையில் தடுப்பு இல்லாமல் சேர்ந்தாற்ப்  போலவும், மற்ற அறைகள் தனித்தனியே அமைந்துள்ளது. இந்த மாதிரி வடிவமைப்பு எனக்குப் புதுசு... 

    சன்னல் இடை
          சில்லென காத்து
                சின்ன பயல பாத்து
                       சிங்கார பாட்டு
                             சிற்றோடை மனசு
                                      சீட்டாட்டம் போடுதே! 

நீங்களே பாருங்க சன்னல் வழியே...                  ஆமாங்க, இந்த பதிவுக்கு விதையே இந்த பெரிய கண்ணாடி சன்னல் தாங்க... எழில் கொஞ்சும் அந்த  வரப்பிரசாதத்தை. விழிகளில் தவழும் இயற்கையின் புன்னகைகளை என்னின் ஒவ்வொரு அணுவிற்கும்   புகட்டிக் கொண்டிருக்கும் கவிதைகளே இந்த சன்னல்......

மெலிதாய் தன் பின்னிடையைக் காட்டும் வீடுகள், அதையும் தாண்டி  தன் வனப்பை வளித்து படுத்துக்கொண்டிருக்கும் மலை, அதனை பச்சை வண்ண பட்டுத் துணியால் போர்த்தியது போன்ற பசுமை நிறைந்த  காடுகள்... விழிகளை கொள்ளைக் கொள்ளும் பரிசுகள்... 

அங்கிருந்து பார்த்தால், தனிமையில்  அமர்ந்திருக்கும் மரபெஞ்ச் நமக்குப் பல கவிதைகளை கொட்டும்...                    மழை  குடிக்கொண்டிருக்கும் நாட்களில் சன்னல் கண்ணாடிகளில் வலம் வரும் துளிகளில் பயணிக்கிறது மனசு... 
அது ஒரு கார் காலம் கண்ணே... 

தனிமையொத்த நிமிடங்களில் சன்னலில் தலை சாய்ந்துக்  கொண்டிருக்கிறது மனசு... 

அப்படியே இந்த பதிவை படிக்கும் மனதோடும் உறவாடிக் கொண்டிருக்கிறது..

9 Sep 2010

கடலோர நடை பயணம் 2

கடலோர நடை பயணத்தின் முதல் நடை மிக நீளமான அருமையான  உணர்வாக அமைந்தது.  இந்த இரண்டாவது பயணம் கொஞ்சம் வித்தியாசமானப் பயணம். எப்படீன்னு நீங்க கேட்கிறது புரியுது.  

வாங்க நாம நடக்கலாம்...

போன ஞாயிறு Portrush என்கிற ஊர்ல, விமானக் கண்காட்சி நடந்தது. அதுக்கு  போக முடிவு செய்தோம்.

காலையில் 9.40க்கு புகைவண்டி. கொஞ்சம் கூட பொறுப்பில்லாம 9.10க்கு வரைக்கும் நான் கிளம்பல. அவசர அவசரமா கிளம்பிப் போனா! வண்டி வர சில நிமிடங்கள் இருந்தது. அப்ப தான் தோணிச்சு, கையில இருக்கிற காசு பயணச்சீட்டுக்கு பத்துமா? பத்தாதான்னு?. சரி, ரிஸ்க்க ரஸ்க்கா சாப்பிடுற பரம்பர இல்லையா, வண்டியில ஏறியாச்சு. அடுத்த நிறுத்தத்தில், வேற வண்டி மாறனும் அப்படின்னு சொன்னங்க. சரி கிடச்ச gapla காசு எடுக்க ஓடினேன். ஒலிம்பிக் தங்க மெடல் வாங்கிற வேகம். பாதி தூரம் போகும் போது தான் பார்த்தேன், வண்டி கிளம்ப மணி ஆச்சுன்னு.  நம்ம நண்பர் வேற என்னை அழைபேசியில் தேடுகிறார். பின்ன என்ன பண்ண, ரெண்டு மெடல் வாங்க அது விட வேகமா வண்டிக்கு வரதுக்குள்ள என் வயற்றில் இருந்ததெல்லாம் வாய் வழி எட்டிபார்க்க துடிச்சுது.

அப்புறம் காசு போதுமானதா இருந்தது. அங்க போனா, கண்காட்சி கண்றாவியை விட கன்றாவியா இருந்தது. நம்ம ஊர்ல நடக்கிறதே நல்லா இருக்கும்.

அதனால, அங்கிருந்து Londonderryக்கு போலாமுன்னு முடிவு. இங்க தாங்க நம்ம பயணம் தொடங்குது.    

Portrushலிருந்து Londonderryக்கு சுமார் 75 நிமிடங்கள் பயணம்.

இயற்கை  நமக்குத் தரும் மகிழ்ச்சிக்கு அளவே கிடையாது இல்லையா? போகும் வழியின் இருபுறமும் என்னை இழுத்து  போட்டு மனசில் படம் பிடிக்க வைத்தது இயற்கை.

ஒரு பக்கம் பச்சை பசேலுன்னு வயல்கள், விதைகளுக்கு காத்திருக்கும் வயல்கள். 

இன்னொரு  பக்கம் கடலும் அதன் மணலும் எங்க  எந்த இடத்தில் பின்னிக் கொள்கிறது என்று தெரியாத  அளவிற்கு  அப்படி  ஒரு அற்புதமான  பினைவுக் காட்சி.
    
விழி வழி விருந்து உட்கொண்டே போனது மனசு. 
நம்ம ஊட்டி  மலை  புகை வண்டி பாதையில குகைகள் வருமே அந்த மாதிரி  இந்த பாதையிலும் மூன்று  குகைகள். குகைகளுக்குள்ள என்ன அழகுனா, இந்த பக்கம் நம்மளோட பயணிக்கும் கடல், இருங்க நான் வந்திடுறேன்னு சில வினாடிகள் ஓய்வு  எடுக்க மறைந்து போகும் உணர்வு. 

இன்னொரு அழகும். நானும் உங்களை வரவேற்க தயார இருக்கிறேன்னு சொல்ல இருண்ட மேகங்களை பிழிய காத்திருந்தது வானம்.

இப்போ Londonderry பற்றி 

Northern Ireland எல்லை  பகுதியில்  இருக்கும் அழகோவியம். இதை தாண்டினால் Ireland வந்துவிடும். 

அடர்த்தியான வீடுகள், குறுகிய சாலைகள்,  மேற்கத்திய நகரங்களுக்கே உரிய  நகர் அமைப்பு. கடலை முத்தமிட்டுக் கொண்டிருக்கும் உலக வரைப்படத்தில்  ஒரு குட்டிப் புள்ளி. 

இந்த  ஊரை  சுற்றி  கோட்டை  மதில்  சுவர் கட்டி இருக்குங்க. சுமார் 2kms சுற்றளவு. நகரின் மையப் பகுதிகளை சுற்றி கட்டப்பட்டுள்ளது. நாங்க சுமார் ஒரு மணி நேரம் புகைப்படங்களுக்கு  தீனி போட்டுக் கொண்டே சுற்றி வந்தோம்.  இந்த மதில் சுவரை சுற்றி வருவதே ஒரு காதல் வயப்படும் உணர்வு. எத்தனை எத்தனை மனிதர்கள்? இளையவர்கள் முதல் வயதானவர்கள் வரை, அன்பை காட்ட ஒரு அருமையான இடம்.

இயற்கை அன்னை எனக்களித்த அமிர்தத்தின் ஒரு துளியை புகைபடங்கள் வழியே புசித்துக் கொண்டே நடந்தோம். மாலை வேளையில் வானம் மெல்ல தன்  அன்பு துளிகளை தூவ.. 
அற்புத விடியல்கள் ஒவ்வொரு துளிகளிலும்...
ஒரு நதிக்கரையோரம்  பறக்க  சிறகு  விரித்தது மனசு. அதனுடன்  நடக்க தயாரானது  கால்கள். 

இப்படியும் நம் உலகத்தை சுவாசிக்கலாம்....

6 Sep 2010

செந்நிற தூறல்கள்வானவில்லிற்கு முந்தைய தருணங்கள்
வெள்ளி மணிகள்
செந்நிற தூசிகள் - அவள்
நினைவுகளின் தூறல்கள்!

நிசப்தமான மர அமர்வு - தனித்த
நிழலுடன் உரையாடுகிறது
வான் வளி வழி
துரத்தில் நட்சத்திரம் - இரண்டு

ஈரம் படிந்து
அரிக்க தொடங்குகிறது
மனசு -
அலைகளாய் நினைவுகள்

இருதயத்தின் நாடிகள்
குடிபுகு முகபாவங்கள்
என்னுள் வரையப்படும் - அவள்
இதழ் ஓவியங்கள்...