27 Nov 2011

வழியும் நினைவுகளிலிருத்து

நன்றி: fuchsintal.com
 

இடுக்குகளில் கசியும்
வெளிச்சத்தில் தவிக்கிறது மனசு
மெல்லிய விழி
இதழ்களை விரித்து
புன்னகையால் ஒளி
வெள்ளம் பாய்ச்சுகிறாள்
கதிரவனை கண்ட காந்தியாய்
துள்ளி எழுகிறேன்....

பின்பனியில் உறைந்துபோன
எழுத்துக்கள் - அவளின்
ஆவணி கால அரங்கேற்றங்களில்
நிரம்பி வழியும் நினைவுகளிலிருத்து
கசியத் தொடங்குகிறது..

9 Feb 2011

ப்பா நிறங்கள்....



1.
டெடி பொம்மைக்கு
காய்ச்சலாம்
பிஞ்சு விரல்களில்
நெற்றி தொடுகிறாள்
காலிலும்  கையிலும்
ஊசி போடுகிறாள்
தடவி விடுகிறாள் 
நான் டெடியாகிக் கொண்டிருந்தேன்...

2.

ராசு  அண்ணன்
நேற்று வந்து போனான்
கமலா அக்கா
இன்று வந்திருக்கிறாள்
மாமனும் மச்சானும்
சித்தியும் சிக்கல்களும்
போன பின்
கேட்கிறான்
அப்பா னா என்னமா?


7 Jan 2011

முதல் பனி - 3

 (காரையார் அணை, பாபநாசம்)

ஒரு சந்திப்பையும், தொடர் நிகழ்வுகளையும் எப்படியெல்லாம் சொல்லலாம்......

விடிகாலை தேனீர் புகை
குழந்தையின் முதல் அழுகை
சன்னல் ஓர மழைத் துளி
ஒரு புத்தகம் கொடுக்கும் மூட முடியா பக்கம்
கனிந்த பழத்தின் ருசி

இவை எதுவுமில்லாமல்,
மெல்லிய வலியுடன் உறையும் உணர்வு.....

ஆரத்தழுவிய மனசு கங்காரு குட்டியை போல் அவரது நட்பின் வயிற்றில் இடம் பிடித்து அமர்ந்து கொண்டது. பிள்ளையின் தொண்டைக்குழி தேன் சுவை இன்ப ரேகைகள் என்னுள் பரவக் கண்டேன்.

நகர்ந்து கொண்டிருக்கும் நொடி முள்ளை என் நினைவுகளுக்குள் சொருகி விட்டேன். பிரசவம் பார்த்திருந்த உறவுக்குள் நட்பும் ஒட்டிக் கொண்டது. இரு உள்ளங்களும், மூன்று உடல்களும் அந்த பொழுதின் புதையலுக்குள் கரைந்துக் கொண்டிருந்தன....

குடும்பம்  வந்து போகிறது. தொழில் வந்து போகிறது. இடையிடையே எழுத்தும் வந்து போகிறது. இவை அனைத்தும் கவிதைகளாய் பூத்துக் குலுக்கும் ஒரு நாள்.

தோசையும், கெட்டி சட்னியும், பூரியும் கூடவே ஒட்டிக் கொண்டே பில்லும் "வணக்கம் அண்ணே"ங்களுக்கு நடுவில்.

நிகோடின் புகைகளுக்கு மூன்று நான்கு முறை உயிர் கொடுத்தாகி விட்டது.

உறவுக்கு வித்திட்டவள் புது ராஜ்ஜியம் நோக்கி நகர்கிறது ஆவல். பெற்றெடுத்து கொடுத்தவனும் தமையனா மாறியவனும் வழி மேல் விழி வைத்து வாசல் தேடி பயணிக்கின்றனர்.

தங்கையின் முகம் காண என் முன்னே சென்று விட்டது மனசு. அவளும் புன்னகைகளை விரித்து பாசம் கொட்டுகிறாள். அங்கு அண்ணனுக்கும், தங்கைக்குமாய் ஒரே கவிதை பதியப் படுகிறது........

அறிமுகப் படலம் நடக்கிறது. 

இரண்டு மாதங்களாய் சேர்த்து வைத்த பாசக் குமிழிகளை ஒவ்வொன்றாய் உடைத்து விதைத்துக் கொண்டு வருகிறேன்... நினைவுகள் நிகழ்வுகளாய் உருமாறிய தருணங்கள் அவை.....

வீட்டிற்கு செல்கிறோம். விவரம் பரிமாறப்படுகிறது. தாய் பம்பரமாய் சுழன்று கொண்டிருக்கிறார். அன்னையின் அன்ன வாசனை மூக்கு நுனியின் விலாசம் அறிந்து அமர்ந்து கொண்டது....

நிமிடங்கள் ரெக்கை கட்டி பறக்க அங்கும் இங்குமாய் மன ஓடத்தில் கோப்பைகளுக்குள் நிரம்பிக் கொண்டிருந்தோம்....

பசியின் அறைகூவலில் அடுக்கப் பட்ட ஆகார பைகளை திறந்த பின், தாய் அவள் திசை பார்த்து பாசத்தில் நன்றியில் வணங்கியது.

பசி மறைய மனம் மகிழ தொடர்ந்தது பயணம்... 




பாண தீர்த்த அருவியும், 
காரையார் அணையும் 
தண்ணீர் இல்லாமலும்  
நிறைந்தே இருந்தது 
பா ரா சத்தால்.....