31 Jul 2010

சிநேகத்தின் உதிரங்களே......


கவிதைகளின் வழிகளில்
கனவுகளை வைக்கவில்லை
காலமெல்லாம் கலையாமல்
கரைந்திருக்கும்
நட்பை அல்லவா விதைத்தோம்

அன்று
வள்ளுவனும் இளங்கோவும்
வடித்த உறவுக்கு
இன்றும்
கோடானக் கோடி தோழமையின் அணுக்கள்
உயிர்க் கொடுத்துக்கொண்டிருக்கிறதே....

பிறக்கையில் தாய்ப்பாலும்
நடக்கையில் நட்பின்பாலும்
சுவாசித்துக்கொண்டிருக்கிறேன்...

இலையுதிர் பொழுதுகளும்
இமை மூடும் தருணங்களும்
மெல்ல வந்து போகலாம்
நெஞ்சினில் புதைந்த மலருக்கு
உரம் ஊற்றிய
அன்பின் நேசக்கரங்களே

உங்கள் நினைவுகளுடனே
பூக்கும் இந்த
பூவிலிருந்து உதிரும்
ஓவ்வொரு இதழ்களும்
சிநேகத்தின் உதிரங்களே......  
--------------------------------------------------------------------
நட்பின் அன்பு உறவுகளுக்கு என் நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்

26 Jul 2010

நேசக்கடவுளென உள் புகுந்தவள்

நிலவொளி நீண்ட இரவுகளில்
என்றும் சேரா தண்டவாளங்களில்
சேர்ந்தே அமர்ந்திருக்கிறோம்

கரைந்துப் போன மணித்துளிகளில்
கறை படியா உறவினை வளர்த்திருக்கிறோம்

குறிஞ்சிப் பூக்களைக் கொண்டு
பாலைவனச்சோலையில் நடனமாடுகிறாய்

நேசக்கரம் நீட்டி காதலின்
கண்களால் ஓவியம் தீட்டிக்கொண்டிருக்கிறாய்

நானோ
நிஜங்களின் நிழல்களில்
உனக்கானக் கவிதைகளுக்கு
பிரசவம் பார்த்துக்கொண்டிருக்கிறேன்

இன்றும்
நிலவொளி நீண்ட இரவுகள்

தனிமைப் பனிகடல் உருகி எரிகிறது - என்
உணர்வு சருகுகளில் குளிர் காய்கிறாய்

மௌன சப்தத்தில் இணைதலின் பாடல்கள் பிறக்கின்றன
உயிரணுக்களின் மரண ஊர்வலத்தில்
வாசித்துக்கொண்டிருக்கிறாய்

புனைந்துக் கிடந்த நொடிகளை அழைத்துப்பேசுகிறேன்
உந்தன்
கோரப்பற்களுக்கு உதிரத்தால் தாகம் தனிக்கிறாய்...

கட்டளைகள் ஏற்று வளைகிறேன்
துரோகி முத்திரையால் முறித்து விளையாடுகிறாய்

நீயோ
முகில்கள் வற்றிய ஒரு பாலைவனப் பகலில்
கருவேல நிழலடியில் -
பிரிதலின் கடிதப் போக்குவரத்திற்குக் கொடியசைத்தாய்

நேசக்கடவுளென உள் புகுந்தவள்
என் காதலின் சாம்பல்களை
புசித்துக்கொண்டிருக்கிறாள்.....

25 Jul 2010

பெல்பாஸ்ட் -‍ மேன்செஸ்டர் - பெல்பாஸ்ட் : 2

அன்பின் நேசக்கரங்களுக்கு பஞ்சம் என்று சொல்லி கேள்விப்பட்டிருக்கேன். எனக்கு இல்லீங்க...

நம்ம பயணத்தின் இரண்டாவது பகுதி, என் மீது நண்பர்கள் மற்றும் அவர்களின் துணைவியார் தூவிய அன்பின் மழைத் துளிகளே...

ஒரு தாய் வயிற்றில் பிறக்காத சகோதரிகள் அவர்கள். அதுவும் தங்கை உறவு தாங்க..(கொஞ்சம் உருகி விடுவேன், இந்த அண்ணன் தங்கை உறவுக்கு. நீங்களே சொல்லுங்க யாரு தான் உருக மாட்டாங்க?)


சனிக்கிழமை 10th சூலை, காலையில மேன்செஸ்டரில் இறங்கி வீட்டுக்கு போகும் போதே, நம்ம வயித்துக்குள்ள இருக்கிற கோழி நூறு தடவை கூவிருச்சு....  :(

போனவுடன் ஒரு வணக்கம் போட்டா, சுடச்சுட உப்புமா :) என்ன சுடச்சுடன்னு விசாரிச்சா நீங்க பசியோட வருவீங்கன்னு தெரியும், சூடா இருந்தா கொஞ்சம் நிறைய சாப்பிடுவீங்கன்னு இப்போ தான் செஞ்சேன் ஒரு தங்கையிடமிருந்து வந்து விழுந்த முத்து. எல்லோருமே இந்த பதிலை சொல்லுவாங்கலே, என்ன பெருசா? என்று நீங்க நினைக்கிறது  தெரியுது... என்ன முக்கியமுன்னா, காஞ்சு போன கருவாடு மாதிரி வெந்ததையும் வேகாததையும் பல நாளா சாப்பிட்ட எனக்கு, இந்த மாதிரி பதில் முத்து தாங்க...

இதுல இன்னொரு விசயம் என்னனா, சோறு போட்ட ஆத்தாவை ;) அப்ப தான் முதன்முறையாய் சந்திக்கிறேன். அந்த கணத்தில் ஆரம்பிச்ச அன்பின் தூறல்கள் தாங்க இந்த பதிவின் விதைகள்....

ஒரு குட்டி தூக்கம் போட்டு எழுந்தா,

பிடித்துப்போடும் சமையல் வாசனை
கேட்டு செய்த உணவுகள்
பக்குவமா பரிமாறும் கரங்கள்......
பறந்து போன நாட்களை திரும்பிபார்த்துக் கொண்டிருக்கிறேங்க...

சனி போய் ஞாயிறு Blackpool போனோம் (அது தனியா)

அரவணைப்புகளுக்கு எங்கும் எப்பொழுதும் இருக்குங்க....

திங்கள், செவ்வாய் ஒக்கார்ந்த இடத்திலிருந்து எழுந்திருக்க முடியாத வேலை பளு.....

காலை வெகுநேரம் தூங்க விட்டு
எழுந்தவுடன் உணவு கொடுத்து
அப்பப்ப பசி போக்க
சிற்றுண்டிகள் பரிமாறி...
 
இப்படியாக அழகாய் நாட்களை சுவாசித்துக் கொண்டிருந்தேங்க...

தினங்கள் ஓடிபோய், கிளம்பும் தருணம், மறைக்க முடியா பிரிவின் வாசனை முகர்ந்து கொண்ட முகங்களை பார்க்கும் பொழுது பொங்கிய உணர்வுகளே இந்த பதிவு...

இப்போ அவுங்களுக்கு புரியற மாதிரி ஆங்கிலத்தில்.... ஒரு சின்ன நன்றி உரை... 

They are my friends…yep… still they are like my bros and sisters from different mothers. It may be a bit emotional….but I don’t find anything unusual… Way the days treated me was amazing, largely due to the level of affection these guys poured on me. I have no wonderful words or poems to explain my feelings on this.  Just a Thank you deep from my heart…

Thank you Guys…. What a wonderful time u have gifted me……

ஒன்னும் இல்லிங்க பெருசா... ஆனா, மகிழ்ச்சியை பகிரும் பொழுது பெருகும் பாருங்க அதுக்காகவே எழுதுணங்க...

24 Jul 2010

கவிதை அரங்கேறும் நேரம்

நெடுந்தூரப் பயணம்
நெஞ்சில் மலரும் தாளம்

அறநூறு நிமிடங்கள்
ஆறாயிரம் நிகழ்வுகள்
ஆறு கோடி உணர்வுகள்
ஆராத நினைவுகள்

நாலு மணி
நாணூறு ஆண்டுகளாய்....

நீ
தோள் சாய்ந்த நேரம்
சுகராகம் சுயம்வரம்
வாசித்துக் கொண்டிருக்கிறது
என் இதயத்தில்....

ஆறு மணி
அறுபது நொடிகளாய்.....

காகித பூ அழகில்
காய்ந்த சருகு வாசத்தில்
கலங்கி போன
மனங்களுக்கு அன்று
பரிமாற்றம் அரங்கேறியது...

வார்த்தைகள் அடுக்கி
வாக்கியங்களாய் மாற்றி
அங்காங்கே நமக்குள்
சிதறிக்கிடந்த -
முகங்களை வெளிக்கொணர்ந்தோம்...

உன் விழி நீரில்
கசியும் என்னையும் என்
விழி வழி மௌனத்தில்
சுவாசிக்கும் உன்னையும்
உணர்ந்து கொண்டோம்!

நாம் கடந்து பாதையில்
தங்கிவிட்ட நிஜங்களின் நிழல்கள்
உள்ளத்தில் வடிக்கப்படுகிறது
உதிரத்தில் புணைந்துவிடுகிறது...  

ஈரைந்து மணி காலங்கள்
எங்கிருந்தோ
ஒலியோசை
மிதந்து வருகிறது......

உன்னுடன் நான் இருந்த
ஒவ்வொரு மணி துளியும்
மரண படுக்கையிலும்
மறக்காது கண்மணியே....

19 Jul 2010

மகிழ்ச்சியை பகிர்ந்துகொள்ள ஆசை...

மகிழ்ச்சியை பகிர்ந்துகொள்ள ஆசை...

என் பயணக் கட்டுரை  பெல்பாஸ்ட் - மேன்செஸ்டர் - பெல்பாஸ்ட் : 1 
18 July 2010  tamilish.com வலைப்பதிவில் பிரபலப்படுத்தப்பட்டு, அதன் முதல் பக்கத்தில் இணைத்துள்ளனர்...

" Hi vinodnila,

Congrats!

 Your story titled 'பெல்பாஸ்ட் -‍ மேன்செஸ்டர் - பெல்பாஸ்ட் : 1' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 18th July 2010 06:14:02 PM GMT

Here is the link to the story: http://www.tamilish.com/story/304563 "


வாக்களித்த மற்றும் அணைத்து தோழமைகளுக்கும் என் நன்றி பல...


 

17 Jul 2010

பெல்பாஸ்ட் -‍ மேன்செஸ்டர் - பெல்பாஸ்ட் : 1

எழுதாம இருக்க முடியலிங்க.. நாலு நாள் ஊருக்கு போய் உங்க குடும்பத்தை பார்த்தா எப்படி எழுதாம இருக்க முடியும்? என்னடா இவன் இத்தனை வருசமா எழுதின மாதிரி பேசறானேன்னு கேட்கிறீங்களா? சும்மா! அறிமுகம் வேணுமில்ல..

போன வாரம் நாலு நாள் (10 -13 July), இந்த ஊரு, அதுதாங்க நம்ம பெல்பாஸ்ட்ல‌ (எப்ப நம்ம ஊரு ஆச்சுன்னு கேட்கிறீங்களா, இருக்குற ஊரெல்லாம் நம்ம ஊரு தாங்க) ஒரு பிரிவு ஊர்வலமா போய் சுதந்திர நாள் கொண்டாடினாங்க பிரிவுனலே தடுக்க இன்னொரு பிரிவு இருக்கனுமே? தடுக்க, கலவரம், உயிர் பலி..

இதுல நான் இருக்கிற இடம் ரொம்ப மோசமான இடம். வேற வழியில்லாம, உயிரை உடலோட விட்டு வைக்க, என் தோழர்கள் இருக்கிற மேன்செஸ்டருக்கு பயணம்.. இவுங்க தாங்க நம்ம குடும்பம் இங்க.

பத்தாம் தேதி காலையிலே நண்பர் ஒருவரோட விமான நிலையம் போனா, அங்க ஆரம்பிச்சது விளையாட்டு.. online check-in பண்ணி boarding pass எடுத்து போனா, scan ஆகல‌ போய் வேற வாங்கிட்டு வாங்கன்னு அணுப்பிட்டாரு நம் அருமை சுங்க அதிகாரி... நில்லு வரிசையில!எல்லோரும் என்னை ஒரு மாதிரி பார்த்தாங்க, என்னடா இவன் pass யை கையில வைச்சுகிட்டு வரிசையில நிற்கிறானே என்று... இதுக்கு நடுவுல, நமக்கு வேற படபடப்பு...கவுன்டர் அக்காகிட்ட pass வாங்க பத்து பவுண்டு (700 ரூபாய்) மொய் வைக்கனுமே :( (கொள்ள தாங்க, என்ன பண்ண‌ முடியும்).. அங்க போனா, அழகா சிரிக்கிற அக்கா என்ன பார்த்து முரைக்கிற மாதிரியே இருந்திச்சு..

ஒரு வழியா அத வாங்கிட்டு security check முடிச்சு ஒரு மணி நேரம் நிலையத்தை சுத்தி விமானம் ஏறி உள்ளே போனா நம்ம இருக்கையில ஒரு அம்மாவும் குழந்தையும் (குழந்தை இருந்ததுனால தாங்க அம்மான்னு சொல்ல வேண்டியதாப்போச்சு) .

மாத்தி உட்கார வெச்சா, அந்த குழந்தைக்கு கோவம் போல ஜன்னல் பக்க இருக்கை ஏன்டா தருலேன்னு அப்பப்ப எட்டி உதைச்சுகிட்டே வந்தாங்க. அந்த அக்காவுக்கும், இல்ல இல்ல, அந்த அம்மாவுக்கும் உள்ள சந்தோசமான்னு தெரியில....இரண்டு தடவை பார்த்தாங்க, அப்புறம் அவுங்களும், உதைச்சா பரவாயில்லையுன்னு விட்டுடாங்க :( .
இத ஏன் சொல்றேனா, இப்ப பக்கத்தில இல்லாத என் செல்ல பாப்பா, கூட பறப்பாங்கில்ல..அவுங்க உதைச்சா, நம்ம வீட்டுகாரம்மா இப்படி தான் மனசுக்குள்ள சிரிச்சுகிட்டே அந்த பக்கம் திரும்ப மாட்டாங்க? நாம தான் இப்படி செய்ய முடியல, நம்ம குழந்தை செய்யுறாலேன்னு...

இப்படி கனத்த இதயத்தோடு ஜன்னல் வழியே பார்த்தா....மேகம்! முதன் முறையா மேல இருந்து ரசிச்சேன் (பல முறை பார்த்திருக்கிறேன், ஆனா ரசிச்சதில்ல). நம்ம திருப்பூர், ஈரோடு பக்கம் பஞ்சு ஆலைங்களுக்கு போனா, உதிர்ந்த பஞ்சை தரை பூரா கொட்டி வெச்சா எப்படி இருக்கும், அது மாதிரி இருந்துச்சுங்க. நினைவுகள் நம்ம தமிழ் மண்ணுக்கு ஓடி வந்திருச்சு... என்னையும் காத்தோடு தூக்கிட்டு வந்து உட்கார வெச்சுருச்சு... அப்ப தாங்க இந்த வரிகள்...


நீ பிய்த்துப் போட்ட
கரடி பொம்மையின் தோல் நுனிகளா?
ஆங்கங்கே உதிர்த்து விட்ட‌
நாலு பல் வெள்ளை புன்னகைகளா?

எதுவாகட்டும் ‍ செல்லமே
நினைவுகளை விதைத்துவிட்டாய்
யாழினை வாசித்துக்கொண்டிருக்கிறேன்..

இங்கே எதுக்கு/எப்படி கவிதைன்னு பார்க்கிறீங்களா? கோவை பக்கம் வந்திட்டேன்..என் யாழினி எண்ணம் இல்லாமலா?

இப்படியே இரண்டு மணி நேரம் போச்சு! மேன்செஸ்டர் வந்துச்சு... அட பாவி இரண்டு மணி நேர பயணத்திற்கே இத்தனை மொக்கையினா நாலு நாளைக்கு எத்தனைன்னு நீங்க அடிக்க வரது தெரியுது.

அதுனால இதன் தொடர், அடுத்த பதிவு... ஆங்கிலத்தில்...ஏன்னா நம்ம நண்பர்களுக்கும் அவர்களின் மனைவிகளுக்கும் தமிழ் தெரியாது...

அவுங்க என்னை பார்த்துக்கிட்ட நெகிழ்ச்சிக்கு சமர்ப்பணம்..
 
இப்போதைக்கு இது போதுமா?

12 Jul 2010

ந‌ல்வாழ்த்துக்க‌ள்

பிரியமானதலின் வண்ணம்
தோழமையில் ஒளிரும்
வாழ்க்கை நதியில்
க‌ரைக‌ள் வெவ்வேறாயினும்
ப‌ட‌கு ஒன்று தானே!
இணைகிற‌ புள்ளியில் கோல‌மிடுகிறோம்

க‌ரம் கொடுத்து உர‌ம் போடும் உறவு
பாலின‌ம் பாரா அழ‌கின‌ம் -‍ இது
ந‌றும‌ண‌ம் குறையா அழ‌கோவியம்

நாடு க‌ட‌ந்து க‌ட‌ல் ப‌ற‌ந்து
நினைவுக‌ள் ம‌றக்கா ந‌ட்புக்கு
பிற‌ந்த‌நாள் ந‌ல்வாழ்த்துக்க‌ள்!

8 Jul 2010

நரைக்கூடி கிழப்பருவமெய்தி

பாவாடை தாவணி புகைப்படம்
பூப்பெய்த நொடி வெட்கம்
சட்டென திருப்பும் ஓரப்பார்வை
கூந்தல் நகர்த்தும் பிஞ்சு விரல்
வெள்ளை உடை புன்னகை
தோள் சாயும் நட்பு
கரம் அழுத்தும் மெல்லிய அச்சம்
எதிர்பாரா இதழ் பதிப்புகள்
நெற்றி முகர்க்க வளரும் பாசம்
முடி கலைக்க வழியும் காதல்
காலைநேர விழிவிரியாமுன் முத்தம்
முகம் புதைக்கும் கண்ணீர்

இப்படியாக

எனை கரைத்துக்கொண்டிருக்கிறேன்
உருகி வடியும் நினைவுகளாய்
எதிர்கால ஓவியத்தில்

நீயோ

கடந்துபோகிறாய்
மறந்துபோகிறேன் - திரும்புகையில்
மறைந்துபோகிறாய்

நீ உதிர்த்துவிட்டு போன
பனித்துளி இதழ்விரிப்புகளில்
பாவிமனம் கரையுதடி

என்றோ தொடங்கிய
மோக ஆட்டங்கள்
தனித்திருந்த பொழுதுகளில்
சுருதியில்லா முகாரி கசிந்துக்கொண்டிருக்கிறது
இதயக் கூட்டில்

என் மௌன யுத்தத்திற்கு
தீனி போட்டுக்கொண்டிருக்கின்றன
புணைதலில் தப்பித்த
காற்றலைகளின் கதைகள்

செதுக்கிப்போட்ட பிரிய ஓலைகள்
தூது அனுப்பிய கூண்டுக்கிளி
காலந்தவறா குறிஞ்சிப் பூக்கள்
கைமறந்த மூக்கு கண்ணாடி
வழித்துணையாய் கைத்தடி
உயிர்நீத்து உதிரும் ரோமம்

அடி போனது போகட்டும்

நம் நிழலுடன் உரவாடிக்கொண்டிருக்கிறேன்
என்றாவது ஒருநாள் நீ வருவாய் எனத் தெரியும்!

3 Jul 2010

சலனமில்லாமல் கன்னிப்பார்வையை

ஒரு முறை வீசுகிறாய்
சன்னல்களில் சலனமில்லாமல்
மோகம் கொண்ட கன்னிப்பார்வையை
சோ வென மழையாய்...
நனைந்த படி நான் ‍
நகம் கடித்தபடி நீ.....

யா‌ழினை வாசிக்கிறாய் ‍‍- உந்த‌ன்
காந்த‌ புன்ன‌கைக‌ளில்...
ப‌ர‌தேச‌ம் போன‌ பிச்சைக்கார‌னாய்
ப‌ர‌வ‌ச‌ப்ப‌டுகிறேன் நான்...

உன் ம‌வுன‌ உரையாட‌ல்க‌ள் - என்
விலாவில் உதிர‌ம் உருஞ்சுகின்றன‌!
ஒன்று
உன்னுள் அணைத்துவிடு - அல்ல‌
பிரிவின் ப‌ரிவ‌ர்த்த‌னைக‌ளுக்குள்
எனை புதைத்துவிடு......