31 Aug 2010

கடலோர நடைப் பயணம்


நீல மங்கை கைகோர்த்து நடந்து பழக கற்றுக்கொடுத்து, கூட நடந்த தருணங்கள்.. இவையே இனி...

இங்கிருந்து (Belfast) சுமார் 20 கீ.மீ. தூரம் போனால் ஒரு சின்ன தீவு மாதிரியான ஊரு (Bangor). அங்கே தாங்க இந்த நடைப்பயணம்.. Bangor பற்றி  அடுத்த  பத்தியில் பார்ப்போம். .. 

இப்போ அங்கே போன அனுபவத்தை.. 

திங்கள் காலை சுமார் 10.30 மணிக்கு புகை வண்டிப் பிடித்தோம்.. 

ஒரு மணி நேர பயணம். நம்ம ஊரு பேரூந்து மாதிரி, வண்டியில்  ஏறிய  பின் தான் பயணச்சீட்டு வாங்க முடியும். ஏன்னா இங்கே  ஏறிய  நிலையத்தில் யாரும் இருக்க மாட்டாங்க. ஏதும் இல்லை நடைமேடைத் தவிர. ஒரு நாள் பயணச்சீட்டு வாங்கிட்டு வண்டியில் அமர்ந்தோம்.. என்ன அருமையான வண்டி… நம்ம ஊரு மூன்றாம்  ஏ சி கூட இப்படி இல்லைங்க. சுத்தம், பஞ்சு இருக்கைகள், சத்தம் இல்லா , ஆட்டம் இல்லா பயணம்.. அப்படியே இயற்கையை ரசிச்சிக்கிட்டுப் போனோம்.. வழிமுழுவதும்  கடலோரமா  தான் போனது வண்டி.   

Bangor ஒரு சின்ன தீவு மாதிரியான ஊர். சொகுசு படகுகள் வாங்கி விடுமுறைகளை பொழுது கழிக்கும் மக்களும், அவர்களின் படகுகளும் காலம் போக்கும் இடம். அழகிய இடம்..

Bangorல் இருந்து ஒரு 6கீ.மீ. கடலோர சுத்தமான நடைபாதை, எந்த சத்தமும்   இல்லை, கடலின்  இசையைத் தவிர.. 

காலையில சரியா சாப்பிடலை.. அதனால கொஞ்சமா ( ஒரு முழு ப்ரைய்டு கோழி, 18 சிப்ஸ் பாக்கெட்ஸ், இப்படி ஒரு 2000 ரூபாய்க்கு) சாப்பிட வாங்கிட்டு நடக்க ஆரம்பிச்சோம்... 

நகரத் தன்மையிருக்கிற இடங்களைத் தாண்டி பாதையை பிடிச்சு தனிமை நிறைந்த நிழல் கிடைக்கவும், கோழி கூவுறது கேட்க, சாப்பிட அமர்ந்தோம். வாங்கிட்டு வந்ததுல பாதியை காலிப் பண்ணிட்டு, திரும்பவும் நடக்க ஆரம்பித்தோம். 

இங்க நம்ம நண்பர்  சூரியன்  பற்றியும் சொல்லணும். அவருக்கு என்ன  தோணிச்சோ, மக்க நாள் முழூவதும்  எங்களுக்கு  உடம்பு  சுடாத  தரிசனம்  தந்தாரு. அதனால
வருண  பகவானுக்கு Holiday. 

பல வகை படகுகள் வளம் வருவதை  பார்க்கும் அழகே அழகு. கால் நனைக்கும் வயதான மனிதர்கள், துள்ளி  குதிக்கும்  இரண்டு  வயது  குட்டி  பாப்பா, தனிமை விரூம்பிகள், காதல் கதை பேசும் ஜோடிகள், தன் குழந்தையை வயிற்றில் சுமக்கும் பெண், துடுப்பு படகு ஓட்டும் சின்ன பெண், அவளை ஆர்வத்துடன் பார்க்கும் அப்பா, கொஞ்சம் கவலையுடன் பார்க்கும் அம்மான்னு, இப்படிப் பல காட்சிகளுடன், பல தரப்பட்ட  முகங்களுடன்  எங்கள் நடை..... 

இதுல ஒரு விஷேசம்... அனைவரும்  வணக்கமும், புன்னகையும்  நமக்கு  தந்து விட்டுத் தான் போவார்கள்.. எத்தனை எத்தனை புன்னகைகள். இதுவல்லவோ எங்கள் சத்து 6 கீ.மீ. நடைக்கு.. 
இன்னொரு விஷயம்.. எத்தனை  விதமான  மனிதர்களைப்  பார்க்க  முடிகிறதோ, அத்தனை விதமான செல்ல  பிராணிகளையும்  பார்க்கலாம்..  அனைத்தும் நல்ல பயிற்சி பெற்றவை.. (எதுவும்  செய்யல எங்களை). 

வசீகரம்  குறையா  கன்னிப்  பாவையின் அத்தனை நளினங்களும் தந்தாள்  இந்த  நீல மங்கை எங்கள் நடை  பயணத்தில்..   
வளைந்து, நெளிந்து, நின்று, நிமிர்ந்து, ஏறி, இறங்கி, குலுங்கி, குறுகி, இப்படி பலப் பல நளினங்கள்.. எங்களுக்கு விருந்து  படைத்தாள்   தண்ணீர் அரசி ..              

ஆட்டம், பாட்டம், ஓட்டம், நடை, களைப்பு, தூக்கம், சிரிப்பு, கைதட்டல் இப்படி மாறி மாறி பொழிந்த வண்ணம் தொடர்ந்தது எங்கள் பயணம்..

25 Aug 2010

சுனை உறவு




*******************************************
திக்கற்ற திசை
நம்பி வாழ்
நீளக் கரம்...
*******************************************

பதின்மத்தில் மூளையில் முளைக்கும் இளமையின் வேட்கையின் முதல் படி. நேசத்தின் அளவுகோளின் உயரம் சற்றே தடுமாறிப் போகும் கணங்களில் பிடித்து தட்டி நிறுத்தும் கரங்களுக்கு வாழ்வை ஒப்படைத்து நாட்கள் நகருகின்றன.

ஈராறு வருடங்களுக்கு பின்னோக்கி பயணக்கிறது நினைவுகள். கல்லூரி மண் மிதித்து சில இடர்களைத் தாண்டி மெல்ல எழுந்த எட்டுதிசையின் புள்ளிகளில் மணக்கிறது எங்கள் கோலம்.

*******************************************
ஏழல்ல எட்டு
நாம் சேர
திரியும் வில்...
*******************************************

இனம் அறிந்து மொழி புரிந்து இணைகிற உள்ளங்கள். உள்புகு மென்மையை வருடிச் செல்லும் நிகழ்வுகள். நிஜங்களின் அருகாமையில் பிணைகிறது ஒரு இசை. இசையில் நுகர்கிறோம்.

கானகத்தில் கடுங்குளிரும் பெரும் மழையும் மாறிப் பொழியும் பொழுதுகளுக்கு நடுவில் வசந்தங்களின் அரவனைப்புகளும் தழுவக் கண்டோம்.

வாதங்களும் விவாதங்களும் சிரிப்புகளும் சிற்சிறு உரசல்களும் யுகங்களை விழுங்க வைகறை வேளையில் ததும்பும் புன்னகைகளே விடியல்கள்.

*******************************************
கண்கள் வழி ஊட
இருதயம் புக பரவ
இதழ் தூவ நகை...
*******************************************

முழுமதியை ஒரு எண்பது முறை கண்டிருப்போமா? மதியில் இல்லை... ஆனால் எங்கள் அரட்டைச் சிறகுகள் கண்டு நிலவு ஒதுங்கிய இரவுகளே இன்னும் ஞாயாபகத்தில்...

அன்றில் பறவைகளாய் துள்ளித் திரிய இல்லை இன்பம். நட்பின் மாமனும் மச்சானும் அக்காவும் சித்தியும் எங்களுக்குமாய் அமைய கண்டே வடிந்ததே வாழ்க்கை.

ஆடி பிறக்க ஞாயிறு அழைக்க மூன்று ஆண்டுகளாய் விதைத்த செடியொன்றின் விழுதுகளின் ஆழத்தில் மணக்கிறது எங்கள் நட்பின் இறுக்கம்.

*******************************************
அரும்ப கவி
ஆழ நேசம்
படர் நிம்
மதி வெண்...
*******************************************

பேருந்து பயணம், வீதியோர நடை, வயல்வரப்பு அமர்வு, தாகம் தணிக்கும் ஓடை, தோள் சாய தோழி, வளரும் பாசம்.

கனவுகள் பல கவிதைகள் பல கனத்து கரைந்து போகும் தருணங்களைத் திரும்பிப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். அவன், நான் அப்பா என்கிறான். அட, அவள் நானும் அம்மா என்கிறாள்.
அடடா, இப்போ நானும் அப்பா...

*******************************************
காலம் நடை
வயது விடை
கனியும் உறவு...
*******************************************

இன்னும் சுரந்துக் கொண்டிருக்கும் நட்பு....

19 Aug 2010

ஒன்றும் இரண்டும் மூன்றானது




பங்குனியில் விதைக்க
ஆவணியில் முளைக்க
ஞாயிறு அட்சதைத் தூவ
ஒன்றும் இரண்டும் மூன்றானது

நமக்குள்
பிடிக்க
அடிக்க
அழ
தேட
தவிக்க
கரைய
சாய்க்க
அணைக்க
மலர

உனக்கென
நினைவு
கவிதை
நேசம்
காதல்
வாழ்வு

இதுவே நிஜமானது

உற்றவள் நீயும்
நமக்கென அவளும்

தொடங்குவதுமில்லை
முடிவதுமில்லை
நீங்களில்லாமல்... 


18 Aug 2010

உமா சங்கருக்காக அரசுக்கு ஒரு கண்டனம்

தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை:




இந்திய ஆட்சிப்பணியில் சேர்வதற்காக செ.உமாசங்கர், தனது இருப்பிடம், மதம் ஆகியவற்றை மாற்றி ஆதி திராவிட இனத்தைச் சார்ந்தவர் என்று தவறான சாதிச் சான்றிதழ் பெற்றுள்ளார் என்ற புகார்களின் அடிப்படையிலும், அவர் படித்த பள்ளி, கல்லூரி, தேர்வு இயக்ககம் மற்றும் தொடர்புடைய அலுவலகங்கள் ஆகியவற்றிலிருந்து பெறப்பட்ட ஆவணங்களின் அடிப்படையிலும், அனைத்திந்திய ஆட்சிப் பணி (ஒழுங்கு மற்றும் மேல்முறையீடு) விதிகள், 1969-ல் மாநில அரசுக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தின் அடிப்படையில் இவர் தொடர்ந்து பணியில் நீடிப்பது பொதுநலனுக்கு உகந்தது அல்ல என்பதாலும், இதுதொடர்பாக ஒழுங்கு நடவடிக்கை மற்றும் உரிய அமைப்பின் மூலம் விசாரணை மேற்கொள்ள இருப்பதாலும் உமா சங்கர், அரசால் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளார். 

என் கண்டனங்கள் 
உமாசங்கர் I.A.S. இதுவரை அதிகாரியாக சென்றவிடமெல்லாம் நல்ல பல சேவைகளை மக்களுக்கு அளித்தவர் என்பது வெள்ளிடை மலை.  புதிய திட்டங்கள், செயல் முறைகள் என்று தனக்கென ஒரு பாணியில் நற்பணி செய்து வந்த அவருக்கு இன்றைய அரசு அளித்துவரும் "தண்டனை" , அதற்குரிய காரணம் எல்லாமே என் போன்ற ஒரு குடிமகனுக்கு மிகுந்த வருத்தத்தை அளித்துள்ளது.

அரசு இது போன்ற அதிகாரிகளுக்கு தண்டனைகளைத் தருவதற்கு என் ஆழ்ந்த வருத்தத்தையும், கண்டனத்தையும் இவ்விடுகை மூலம்  தெரிவித்துக் கொள்கிறேன்.
 
உமா சங்கர் அவர்களை ஆதரிக்கும் பதிவுகள் 

உங்கள் கண்டனத்தை இங்கும் கையெழுத்தாக பதியுங்கள்

17 Aug 2010

ஈங்ங்கங்ங்கிகி.....அஆஆ...அப்பா



வேலை வன்ம பளு
தனிமை உளி விரக்தி
கருத்தரிக்க பிரசவம் கிறுக்கல்
திங்கள் வெள்ளி இருள்
சனி விடியல் என்அகம்
பத்தும் எட்டும் சேர
“ஈங்ங்கங்ங்கிகி.....அஆஆ...அப்பா”
மழலை மொழி எனை
பெற்றெடுக்க
யாழ்முகம்...

14 Aug 2010

ஒற்றைப் புள்ளி கோலம்



பதிவுலகில் நான் என்னும் தொடர் பதிவிற்கு என்னை அழைத்த நண்பர் கமலேஷ்க்கு நன்றி.
 
1. வலைப் பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?

வினோத்

2. அந்தப் பெயர்தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை என்றால் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?

வினோத் தாங்க உண்மையான பெயர்.

3.
நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்து வைத்தது பற்றி?

எதிர்பார்ப்பின் ஏமாற்றங்களும்
என் தனிமை தனிமையை உணர்ந்த தருணங்களும்
பிரசவம் பார்த்த கிறுக்கல்களை
நிலவின் மடியில் சேமித்து வைக்க

4. உங்கள் வலைப் பதிவை பிரபலமடையச் செய்ய என்னவெல்லாம் செய்தீர்கள்?


இந்து மாகடலில்
ஒரு துளியை விதைத்திருக்கிறேன்..
அறுவடையில் தெரியும்...

போங்க அண்ணே... பிரபலமா .. அப்படினா ?

5.
வலைப் பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்? அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?
 
நினைவுகள் நித்திரைகளை
கொணர்ந்த பொழுதுகளில்
கிள்ளி எடுத்து துள்ளி குதிப்பது
கிறுக்கல்களே.... 

காரணம்:
என்றேனும் திரும்ப
என்னை கைப்பிடித்து
அழைத்துப் போக
வாழும் என் சுவாசங்களுக்காய்....
 
6.
நீங்கள் பொழுது போக்கிற்காக பதிவுகளை எழுதுகிறீர்களா? அல்லது பதிவுகள் மூலம் சம்பாதிப்பதற்காகவா?
 

இரைந்து விட்டு தலை கவிழ...
இழந்து விட்டு மனம் குமற..
திரும்ப தொடுக்கும்
கேள்விகளுக்கு மட்டுமே...

சம்பதிப்பதெல்லாம் நட்பின் உறவுகளே....

7. நீங்கள் எத்தனை வலைப் பதிவிற்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப் பதிவு? 

ஒற்றைப் புள்ளி கோலம் போட்டு
அழகு பார்த்துக்கொண்டிருக்கிறேன்  

8. மற்ற பதிவர்கள் மேல் கோபம், அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆமாம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?

இரண்டும் இல்லை..

ஆனால் பலரின் படைப்புகளிலிருந்து மீளமுடியாமல் தவித்திருக்கிறேன்...
 

9. உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டை பற்றி?

என்னை எழுத தூண்டியவர் தம்பி சிவாஜி

முதல் பின்னூட்டத்தின் மூலம் கைகுலுக்கியவர் – என் நண்பர் உதய்...

என் எழுத்துகளையும், என்னையும் அறிமுகபடுத்தியவர் KRP செந்தில் அண்ணன்

நேரில் பாராட்டியது எனது தோழி....  

10. கடைசியாக- விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டியது அனைத்தையும் கூறுங்கள்.

பல எழுத்துக்களின் வாசகனாய் –என்
எழுத்துகளின் விமர்சகனாய்...
பதிவுலகத்தில் ஒரு அழகிய சருகாய்...
நட்பின் வாசனையாய்
பூக்குவே ஆசை...

இத்தொடர் கோலத்தில் இன்னும் கொஞ்சம் அழகு சேர்க்க நாடும் நேசக்கரங்கள்

MANO      

10 Aug 2010

நான் நீ அலை

 
 
கண் முன்னே பரந்து விரியும் கடல்
நாளங்கள் ஊட வளி
உனை தோள் அணைக்க‌ துழாவும் கரம்
இப்பொழுது
மூன்றாம் மனிதனாகிறது அலை
 

4 Aug 2010

களவாடிய பொழுதுகள்



இது அல்ல அது
அணியும் ஆசைகளில்
மாறிய ஆடைகள்
உடல்தழுவ ஒளிரும்
அவள்
விரல்பட்ட கோலங்கள்

ஏக்கங்கள் தேங்கியப் பக்கங்களில்
காத்திருத்து கரைகிறது
என் விழிஇரு துருவங்கள்
உரவாடிய நிலவு விட்டுச்செல்கிறது
அவள்
இரவுகளில் நீச்சம்பெற்றக் கனவுகள்

இதயங்கள் தைத்த
ஒற்றையடிப் பாதையில்
பயணிக்கிறது நினைவுகள்
சற்றே
இளைப்பாறும் இமைகளுக்குள்
அவள்
இமை திறந்து நகைக்கிறாள்

நுனி மூக்கை நழுவி
தெறிக்கிறது
மழையின் துளிகள்
ஈரத்தின் வாசனைகளில்
அவள்
இதழ் பதிப்பின் ஸ்பரிசங்கள்

என்றாவது கடக்கும்
கவிதையெனும்
நேசத்தின் மறுமொழிகள்
மூழ்கிப்போகும் தருணங்களில்
அவள்
என்விரல் பிடித்துத்திருத்திய கொம்புசுளிகள்
 
ஆதி முதல் அந்தம் வரை
ஜனனிக்கும்
இறப்புக்கும் பிறப்புக்கும்
நடுவில்
துடிக்கும் உயிரின் நாடியாய்
அவள்
களவாடிய பொழுதுகள்....

1 Aug 2010

நண்பர்கள் தின கவிதை

KRP அண்ணனிடம் நண்பர்கள் தின வாழ்த்துக் கவிதை ஒன்று கேட்டிருந்தேன்... அவர் அனுப்பி வைத்த கவிதை உங்களுக்காய் அவர் அனுமதியுடன்...

----------------------------------------------------------------------

சிறு பிள்ளை விளையாட்டென
பள்ளிக் காலங்களில் தொடங்கும் நட்பில்
இன்றைக்கும் நினைவுகளில்
நட்பின் குறும்புகள்...

ஆறாம் வகுப்புக்கு முன்
சின்ன பள்ளிக் கூடம்..
அதற்கு மேல் பனிரெண்டு வரை
பெரிய பள்ளிக் கூடம்..
நட்பில் ஒரே பள்ளிதான் எப்போதும்..

பனிரெண்டு வரை படித்தவர்களில்
அத்தனை பேரும் தொடர்பில்லை ..
ஆனால் இத்தனைக் காலமும்
கூட வரும் சில உயிர் நட்பு...

காதலை யாவரும் முதலில்
பகிர்வது நட்பிடமே,
அதனை சுமந்து திரிவதும் நட்புகளே..

பாதைகள் தடம் மாற
பிடித்து இழுத்து பயணங்களை தீர்மானிக்கும்
நட்புகள்
வாழ்வின் அற்புதம்..

என் துயரம்
என் சந்தோசம்
என் உயர்வு
என் தாழ்வென
நட்பின் தீர்மானங்களில் நான்...

சில குறைகள்
சிலர் எதிரிகள்
ஆனாலும் என் நண்பர்கள் இருப்பதாலேயே
சந்தோசமாக இருக்கிறேன்
நான்..

--------------------------------------------------------------

KRP அண்ணனுக்கு எனது நன்றிகள்....