21 Dec 2010

காண் யான்என் இடப்பக்க வழி
தாழ் திறந்து
நினைவலைகளில் - உனக்கான
கனவுக் காட்சிகளை
உருவி
திரையிடுகிறேன்...

நகைக்கிறாய் - உன்
பிஞ்சு விரல்களால்
மெல்ல  வருடுகிறாய்
நேற்று பொழிந்த
பனிமழையில்
நனைகிறேன் நான்....

அள்ளி எடுத்து
காற்றில்
துள்ளிக் குதித்து
வீசி விளையாடுகிறாய்
காண் யான்
உயிர் சுவாசிக்கும்
நிஜங்களாய் - மிதந்து
தரை தொடுகிறேன்....

இதழ் நுனிகளில்

பதியும் - உன்
முத்தங்களின் ஈரம் -
என்னுள்
பெண்மையை தீண்டுதடி
முலையிலும் பாசம் சுரக்குதடி...


10 Dec 2010

முதல் பனி - 2
பனி என்றால்
அழகு, சந்தோசம், இனம் புரியா ஆனந்தம்.
உங்கள் முதல்
கவிதை
சம்பளம்
காதல்
பிள்ளையின் முதல் மொழி , அம்மா/அப்பா, முதல் கிறுக்கல்
முத்தம்....
இன்னும் பல சொல்லிக் கொண்டே போகலாம். இப்படி பல நிகழ்வுகளை நினைவில் நிறைத்து சுவாசிக்கலாம் இன்பத்தை.

பதின்ம  வயதில் கிறுக்கத் தொடங்கிய எனக்கு, எழுத்தைப் பற்றியும், மொழியை பற்றியும் பெரிய ஞானம் இருந்ததில்லை (இப்போ மட்டும் என்னவாம் ன்னு கேட்காதீங்க ப்ளீஸ்).

நாம் காதலிக்கும் பெண் நம்மை காதலிக்க, 
காதலின் வேகம் கூடுமே அப்படி,
எழுத்தின் வலிமையை உணர்ந்த தருணங்களில் எழுதும் வேகம் கூடியது. அதன் வழியே நட்புகளும் அமையப்பெற்றன உங்களைப்  போல.

நான் அனுபவித்த முதல் பனி எப்படி ஓர் அழகிய உணர்வோ, 
அதையே பிரதி எடுக்கும்
சில மனிதர்களின் சந்திப்பும், கை குலுக்கல்களும்.

இப்போ உங்களுக்கு புரிந்திருக்குமே, உங்கள் கணிப்பு சரிதான்...
இனி அப்படியான ஓர் அருமையான முதல் சந்திப்பு...

அன்று திருவிழா...
பட்டாசுகள் காதின் ஆழம் வரை சத்தத்தின் வலிமையைக் கொண்டு சென்ற களைப்பில் உறங்கப்போகும் அந்த இரவு வேளையில், 
நீண்டப் பயணத்திற்கு தயாராகிக் கொண்டிருந்தது மனசு...

ரோட்டோரக் கடையை திறக்க வைத்து, நாங்கள் சில பல ரொட்டிகளை உள்ளே தள்ளிய பின், உருமத் தொடங்கியது டாடாவின் குடும்பக் கார் ஒன்று.

ஏதோ பார்க்காததை பார்ப்பது போல் நெடுக, வழியை பார்த்து பார்த்து தேட வைத்து விட்டார் வருண பகவான். எங்களின்  நிழலாய் துரத்திக்கிட்டே இரண்டு மணி நேரம் வந்தார்...

மழையுடன் பாதைகளை அளந்துக் கொண்டிருந்த எங்களுக்கு, சொன்ன நேரத்திற்கு சில நிமிடங்களுக்கு முன்னால் வந்து சேர்கிறது அலைபேசி அலறல்.

"என்னப்பா எங்க இருக்கீங்க ?" - அந்தப் பக்க குரல்
"வந்துக் கொண்டே இருக்கோம் பா" - இது நான்

நேரம் - இரவு / விடியல் - 2.20AM

கொட்டும் மழையில் நனையும் பூப்போல, இந்த பாச மழையில்  நனைந்து நிறைகிறது என் உள்ளம்.. 

அங்க இங்க பாதையை புடிச்சு டீ குடிக்கும் மனசு அலையும் விடியல் நேரம் ஹோட்டலுக்குள் தஞ்சம் புகுந்த எங்களின் கண்கள் ஓய்விற்கு செல்ல, கைகளும் கால்களும் எனக்கும் உனக்கும் சம்பந்தம் இல்லை என்று தனியே பாய்விரித்தது...

வெயில் எழுப்பியது என்னை..
அலைபேசியில் செய்தி " எழுந்தவுடன் கூப்பிடு"

எழுந்துவிட்டேன், படித்துவிட்டேன், அழைக்கிறேன்..

"வினோபா, என்னயா இப்போவே எழுந்திருச்சாச்சா?"
"ஆமாம்பா"
"எத்தனை மணிக்கு வரட்டும்?"
"ஒரு ஒன்பது மணிக்கு ரெடி ஆயிருவேன்"
"சரிப்பா  வரேன்"


குளித்துவிட்டு வெளியே வருகிறேன்.. சட்டைய தேடிக் கொண்டிருக்கிறேன், வாசல் மணி அழைக்க,
அவர் குரல் உள்ளிருக்கும் காற்றுடன் கலைகிறது..

"வினோ"
"இதோ வரேன்ப்பா"

ஒல்லியான உருவம், ஒரு T-Shirt, Jeans, அவ்வளவே..
இதழில் புன்னகை, மனதில் அமைதி, கரம் விரித்துக்கொண்டே வருகிறார்..

ஆரத்தழுவிக்  கொள்கிறோம்... மனசும், பாசமும், சந்தோசமும் தனித்தனியே தழுவிக் கொள்கிறது.. 

அவரின் அனைத்தும், என்னை ஆட்கொள்கிறது எளிமையாய், முழுமையாய் அவரது கவிதைகளைப் போல...

பனி இன்னும் கொட்டும்...

3 Dec 2010

முதல் பனி - 1


அழகிய தமிழ் மணக்கும் கொங்கு நாடான கோவையில், குளிரின் அரவணைப்பில் தவழும் ஒரு குட்டி  போத்தனூரில் வாழ்க்கையை  தொடங்கிவன் நான்...

பள்ளி பருவத்திலிருந்தே கலைகளில் நாட்டம் கொண்ட எனக்கு தீனி போட்டது கல்லூரி. கனவுகள் ஆயிரம் காண் என்றும் திரிந்தவனுக்கு நெகிழ்வுகள் ஆயிரம் அள்ளி தெளித்தது நட்பு...

படிப்பின் மீது கவனம் சிறிதளவில் இருந்தாலும், கூத்து, கிறுக்கல்களின் மீது அதிகம் இருந்தது. இதில் விளைந்ததுவே அகலவியலா நட்புகள். அதனுடே வளர்ந்ததுவே வாழ்க்கை தேவைகளின் மீதான காதலும்.

என்ன தான் நாட்டுப்பற்றும் ஊரின் மீது பிடிப்பும் வலுவாக இருந்தாலும், என் காலங்களில் பல பேர் விதைத்த வெளிநாட்டு மோகம் இல்லாமலும் இல்லை. ஆம், நான் கண்ட கனவு காட்சிகள் எல்லாம் கணினி வழியாக மனதில் குடி கொண்டன...

உலா வந்து கனவுகளில் ஒன்று தான் அனைவரையும் கவரும் வெள்ளை திரள்களில் கால் புதைய நடந்து, ஓடி, ஆடி,  விளையாடும் தருணங்கள். இதோ இனி முதல் பனி பாகம் 1 (அப்பாட முன்னுரையே இவ்வளவா? )

அட இதுக்கு மேல இப்போ ஒன்னும் இல்லைங்க.. வாங்க என் சந்தோசங்களை புகைப்படங்கள் மூலமா...பெரிய வெள்ளை புறா சிறகு விரித்தால்
 

கொட்டும் பனி மழை - 1


 நனையும் மரங்கள்
           

என் வீட்டு சன்னல் வழியாக 


கொட்டும் பனி மழை - 2


கொட்டும் பனி மழை - 3
 
மூன்றாம் தளத்திலிருந்து - 1

மூன்றாம் தளத்திலிருந்து - தரை...
போர்வை போர்த்திய வீடுகள் -1
(மூன்றாம் தளத்திலிருந்து )
 


போர்வை போர்த்திய வீடுகள் -2
(மூன்றாம் தளத்திலிருந்து )
எங்கோ  ஓர் இடத்தில் வெளிச்சம் என்றும் இருக்கும்...

யாழின்  கொண்டாட்டம்...

 


இந்த புகைப்படங்கள் அனைத்தும் என் அலைபேசி மூலம் எடுக்கப்பட்டது.

பனி  இன்னும் கொட்டும்.......