26 Jul 2010

நேசக்கடவுளென உள் புகுந்தவள்

நிலவொளி நீண்ட இரவுகளில்
என்றும் சேரா தண்டவாளங்களில்
சேர்ந்தே அமர்ந்திருக்கிறோம்

கரைந்துப் போன மணித்துளிகளில்
கறை படியா உறவினை வளர்த்திருக்கிறோம்

குறிஞ்சிப் பூக்களைக் கொண்டு
பாலைவனச்சோலையில் நடனமாடுகிறாய்

நேசக்கரம் நீட்டி காதலின்
கண்களால் ஓவியம் தீட்டிக்கொண்டிருக்கிறாய்

நானோ
நிஜங்களின் நிழல்களில்
உனக்கானக் கவிதைகளுக்கு
பிரசவம் பார்த்துக்கொண்டிருக்கிறேன்

இன்றும்
நிலவொளி நீண்ட இரவுகள்

தனிமைப் பனிகடல் உருகி எரிகிறது - என்
உணர்வு சருகுகளில் குளிர் காய்கிறாய்

மௌன சப்தத்தில் இணைதலின் பாடல்கள் பிறக்கின்றன
உயிரணுக்களின் மரண ஊர்வலத்தில்
வாசித்துக்கொண்டிருக்கிறாய்

புனைந்துக் கிடந்த நொடிகளை அழைத்துப்பேசுகிறேன்
உந்தன்
கோரப்பற்களுக்கு உதிரத்தால் தாகம் தனிக்கிறாய்...

கட்டளைகள் ஏற்று வளைகிறேன்
துரோகி முத்திரையால் முறித்து விளையாடுகிறாய்

நீயோ
முகில்கள் வற்றிய ஒரு பாலைவனப் பகலில்
கருவேல நிழலடியில் -
பிரிதலின் கடிதப் போக்குவரத்திற்குக் கொடியசைத்தாய்

நேசக்கடவுளென உள் புகுந்தவள்
என் காதலின் சாம்பல்களை
புசித்துக்கொண்டிருக்கிறாள்.....

8 comments:

ஜில்தண்ணி said...

//தனிமைப் பனிகடல் உருகி எரிகிறது - என்
உணர்வு சருகுகளில் குளிர் காய்கிறாய் //

அடடா காதல் மயக்கும் வரிகள்
அருமை வினோத்

வினோ said...

@ யோகேஷ் - நன்றி நண்பா...

http://rkguru.blogspot.com/ said...

நல்ல கவிதை வரிகள்........வாழ்த்துகள்

ஹேமா said...

ஒரு பிரிதலுகுண்டான கவிதை.
வரிக்கு வரி வேதனையோடு தொடங்கி முடிந்திருக்கிறது.
நல்லதொரு கவிதை விநோ.

வினோ said...

@ rk guru - வருகைக்கும், பின்னுட்டத்திற்கும் நன்றி நண்பா..

@ ஹேமா - வாருங்கள் ஹேமா... மிக்க நன்றி தோழி

KUTTI said...

"நானோ
நிஜங்களின் நிழல்களில்
உனக்கானக் கவிதைகளுக்கு
பிரசவம் பார்த்துக்கொண்டிருக்கிறேன்"

BOSS,

கவிதை பட்டாசு. வாழ்த்துக்கள்.

மனோ

சௌந்தர் said...

நல்ல கவிதை...

வினோ said...

@ MANO - நன்றி நண்பரே. உங்கள் படைப்புகளும் அருமை.

@ சௌந்தர் - வருகைக்கு நன்றி நண்பரே...