31 Jul 2010

சிநேகத்தின் உதிரங்களே......


கவிதைகளின் வழிகளில்
கனவுகளை வைக்கவில்லை
காலமெல்லாம் கலையாமல்
கரைந்திருக்கும்
நட்பை அல்லவா விதைத்தோம்

அன்று
வள்ளுவனும் இளங்கோவும்
வடித்த உறவுக்கு
இன்றும்
கோடானக் கோடி தோழமையின் அணுக்கள்
உயிர்க் கொடுத்துக்கொண்டிருக்கிறதே....

பிறக்கையில் தாய்ப்பாலும்
நடக்கையில் நட்பின்பாலும்
சுவாசித்துக்கொண்டிருக்கிறேன்...

இலையுதிர் பொழுதுகளும்
இமை மூடும் தருணங்களும்
மெல்ல வந்து போகலாம்
நெஞ்சினில் புதைந்த மலருக்கு
உரம் ஊற்றிய
அன்பின் நேசக்கரங்களே

உங்கள் நினைவுகளுடனே
பூக்கும் இந்த
பூவிலிருந்து உதிரும்
ஓவ்வொரு இதழ்களும்
சிநேகத்தின் உதிரங்களே......  
--------------------------------------------------------------------
நட்பின் அன்பு உறவுகளுக்கு என் நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்

26 Jul 2010

நேசக்கடவுளென உள் புகுந்தவள்

நிலவொளி நீண்ட இரவுகளில்
என்றும் சேரா தண்டவாளங்களில்
சேர்ந்தே அமர்ந்திருக்கிறோம்

கரைந்துப் போன மணித்துளிகளில்
கறை படியா உறவினை வளர்த்திருக்கிறோம்

குறிஞ்சிப் பூக்களைக் கொண்டு
பாலைவனச்சோலையில் நடனமாடுகிறாய்

நேசக்கரம் நீட்டி காதலின்
கண்களால் ஓவியம் தீட்டிக்கொண்டிருக்கிறாய்

நானோ
நிஜங்களின் நிழல்களில்
உனக்கானக் கவிதைகளுக்கு
பிரசவம் பார்த்துக்கொண்டிருக்கிறேன்

இன்றும்
நிலவொளி நீண்ட இரவுகள்

தனிமைப் பனிகடல் உருகி எரிகிறது - என்
உணர்வு சருகுகளில் குளிர் காய்கிறாய்

மௌன சப்தத்தில் இணைதலின் பாடல்கள் பிறக்கின்றன
உயிரணுக்களின் மரண ஊர்வலத்தில்
வாசித்துக்கொண்டிருக்கிறாய்

புனைந்துக் கிடந்த நொடிகளை அழைத்துப்பேசுகிறேன்
உந்தன்
கோரப்பற்களுக்கு உதிரத்தால் தாகம் தனிக்கிறாய்...

கட்டளைகள் ஏற்று வளைகிறேன்
துரோகி முத்திரையால் முறித்து விளையாடுகிறாய்

நீயோ
முகில்கள் வற்றிய ஒரு பாலைவனப் பகலில்
கருவேல நிழலடியில் -
பிரிதலின் கடிதப் போக்குவரத்திற்குக் கொடியசைத்தாய்

நேசக்கடவுளென உள் புகுந்தவள்
என் காதலின் சாம்பல்களை
புசித்துக்கொண்டிருக்கிறாள்.....

25 Jul 2010

பெல்பாஸ்ட் -‍ மேன்செஸ்டர் - பெல்பாஸ்ட் : 2

அன்பின் நேசக்கரங்களுக்கு பஞ்சம் என்று சொல்லி கேள்விப்பட்டிருக்கேன். எனக்கு இல்லீங்க...

நம்ம பயணத்தின் இரண்டாவது பகுதி, என் மீது நண்பர்கள் மற்றும் அவர்களின் துணைவியார் தூவிய அன்பின் மழைத் துளிகளே...

ஒரு தாய் வயிற்றில் பிறக்காத சகோதரிகள் அவர்கள். அதுவும் தங்கை உறவு தாங்க..(கொஞ்சம் உருகி விடுவேன், இந்த அண்ணன் தங்கை உறவுக்கு. நீங்களே சொல்லுங்க யாரு தான் உருக மாட்டாங்க?)


சனிக்கிழமை 10th சூலை, காலையில மேன்செஸ்டரில் இறங்கி வீட்டுக்கு போகும் போதே, நம்ம வயித்துக்குள்ள இருக்கிற கோழி நூறு தடவை கூவிருச்சு....  :(

போனவுடன் ஒரு வணக்கம் போட்டா, சுடச்சுட உப்புமா :) என்ன சுடச்சுடன்னு விசாரிச்சா “நீங்க பசியோட வருவீங்கன்னு தெரியும், சூடா இருந்தா கொஞ்சம் நிறைய சாப்பிடுவீங்கன்னு இப்போ தான் செஞ்சேன்” – ஒரு தங்கையிடமிருந்து வந்து விழுந்த முத்து. எல்லோருமே இந்த பதிலை சொல்லுவாங்கலே, என்ன பெருசா? என்று நீங்க நினைக்கிறது  தெரியுது... என்ன முக்கியமுன்னா, காஞ்சு போன கருவாடு மாதிரி வெந்ததையும் வேகாததையும் பல நாளா சாப்பிட்ட எனக்கு, இந்த மாதிரி பதில் முத்து தாங்க...

இதுல இன்னொரு விசயம் என்னனா, சோறு போட்ட ஆத்தாவை ;) அப்ப தான் முதன்முறையாய் சந்திக்கிறேன். அந்த கணத்தில் ஆரம்பிச்ச அன்பின் தூறல்கள் தாங்க இந்த பதிவின் விதைகள்....

ஒரு குட்டி தூக்கம் போட்டு எழுந்தா,

பிடித்துப்போடும் சமையல் வாசனை
கேட்டு செய்த உணவுகள்
பக்குவமா பரிமாறும் கரங்கள்......
பறந்து போன நாட்களை திரும்பிபார்த்துக் கொண்டிருக்கிறேங்க...

சனி போய் ஞாயிறு Blackpool போனோம் (அது தனியா)

அரவணைப்புகளுக்கு எங்கும் எப்பொழுதும் இருக்குங்க....

திங்கள், செவ்வாய் ஒக்கார்ந்த இடத்திலிருந்து எழுந்திருக்க முடியாத வேலை பளு.....

காலை வெகுநேரம் தூங்க விட்டு
எழுந்தவுடன் உணவு கொடுத்து
அப்பப்ப பசி போக்க
சிற்றுண்டிகள் பரிமாறி...
 
இப்படியாக அழகாய் நாட்களை சுவாசித்துக் கொண்டிருந்தேங்க...

தினங்கள் ஓடிபோய், கிளம்பும் தருணம், மறைக்க முடியா பிரிவின் வாசனை முகர்ந்து கொண்ட முகங்களை பார்க்கும் பொழுது பொங்கிய உணர்வுகளே இந்த பதிவு...

இப்போ அவுங்களுக்கு புரியற மாதிரி ஆங்கிலத்தில்.... ஒரு சின்ன நன்றி உரை... 

They are my friends…yep… still they are like my bros and sisters from different mothers. It may be a bit emotional….but I don’t find anything unusual… Way the days treated me was amazing, largely due to the level of affection these guys poured on me. I have no wonderful words or poems to explain my feelings on this.  Just a Thank you deep from my heart…

Thank you Guys…. What a wonderful time u have gifted me……

ஒன்னும் இல்லிங்க பெருசா... ஆனா, மகிழ்ச்சியை பகிரும் பொழுது பெருகும் பாருங்க அதுக்காகவே எழுதுணங்க...

24 Jul 2010

கவிதை அரங்கேறும் நேரம்

நெடுந்தூரப் பயணம்
நெஞ்சில் மலரும் தாளம்

அறநூறு நிமிடங்கள்
ஆறாயிரம் நிகழ்வுகள்
ஆறு கோடி உணர்வுகள்
ஆராத நினைவுகள் –

நாலு மணி
நாணூறு ஆண்டுகளாய்....

நீ
தோள் சாய்ந்த நேரம்
சுகராகம் சுயம்வரம்
வாசித்துக் கொண்டிருக்கிறது
என் இதயத்தில்....

ஆறு மணி
அறுபது நொடிகளாய்.....

காகித பூ அழகில்
காய்ந்த சருகு வாசத்தில்
கலங்கி போன
மனங்களுக்கு – அன்று
பரிமாற்றம் அரங்கேறியது...

வார்த்தைகள் அடுக்கி
வாக்கியங்களாய் மாற்றி
அங்காங்கே நமக்குள்
சிதறிக்கிடந்த -
முகங்களை வெளிக்கொணர்ந்தோம்...

உன் விழி நீரில்
கசியும் என்னையும் – என்
விழி வழி மௌனத்தில்
சுவாசிக்கும் உன்னையும்
உணர்ந்து கொண்டோம்!

நாம் கடந்து பாதையில்
தங்கிவிட்ட நிஜங்களின் நிழல்கள்
உள்ளத்தில் வடிக்கப்படுகிறது
உதிரத்தில் புணைந்துவிடுகிறது...  

ஈரைந்து மணி காலங்கள்
எங்கிருந்தோ
ஒலியோசை
மிதந்து வருகிறது......

“உன்னுடன் நான் இருந்த
ஒவ்வொரு மணி துளியும்
மரண படுக்கையிலும்
மறக்காது கண்மணியே....”

19 Jul 2010

மகிழ்ச்சியை பகிர்ந்துகொள்ள ஆசை...

மகிழ்ச்சியை பகிர்ந்துகொள்ள ஆசை...

என் பயணக் கட்டுரை  பெல்பாஸ்ட் - மேன்செஸ்டர் - பெல்பாஸ்ட் : 1 
18 July 2010  tamilish.com வலைப்பதிவில் பிரபலப்படுத்தப்பட்டு, அதன் முதல் பக்கத்தில் இணைத்துள்ளனர்...

" Hi vinodnila,

Congrats!

 Your story titled 'பெல்பாஸ்ட் -‍ மேன்செஸ்டர் - பெல்பாஸ்ட் : 1' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 18th July 2010 06:14:02 PM GMT

Here is the link to the story: http://www.tamilish.com/story/304563 "


வாக்களித்த மற்றும் அணைத்து தோழமைகளுக்கும் என் நன்றி பல...